பங்குச் சந்தை ரகசியம்: பங்கு விலை முக்கியமா? மதிப்பு முக்கியமா?

மலிவான பங்குகள் எப்போதும் லாபம் தருமா? முதலீட்டில் தவிர்க்க வேண்டிய தவறு இதுதான்!
பங்கு மதிப்பு - Share Price
பங்கு மதிப்பு - Share Price
Updated on

ங்குச் சந்தைக்குப் புதிதாக வரும் பலரின் மனதில் ஒரு தவறான கணக்கு உண்டு. ‘₹50-க்கு விற்கும் பங்கு மலிவானது. ₹5,000-க்கு விற்கும் பங்கு மதிப்பு விலை உயர்ந்தது என்பதே அது.

எண்களின் அடிப்படையில் ₹50-ஐவிட ₹5,000 பெரிய தொகைதான். ஆனால், பங்குச் சந்தையில் ஒரு பங்கின் 'விலையை' மட்டும் வைத்துக்கொண்டு அது உண்மையிலேயே 'மலிவா' அல்லது 'விலை அதிகமானதா' என்பதைத் தீர்மானித்துவிட முடியாது. ஏனெனில், சந்தையில் 'விலை' (Price) என்பது வேறு, நிறுவனத்தின் 'மதிப்பு' (Value) என்பது வேறு.

உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட் இதை மிக அழகாகச் சொல்வார்: "விலை என்பது நீங்கள் கொடுப்பது; மதிப்பு என்பது நீங்கள் பெறுவது." ("Price is what you pay; value is what you get" - Berkshire Hathaway 2008 Shareholder Letter).

பங்கின் விலை, அதற்கான பணம் எவ்வளவு என்பதை மட்டுமே குறிக்கிறது. ஆனால், அதன் மதிப்பு, அந்த விலையை நியாயப்படுத்தும்விதமான, அந்தப் பங்கிற்குப் பின்னால் இருக்கும் நிறுவனத்தின் பலத்தைக் குறிக்கிறது.

ஒரு பொருளின் விலையை மட்டும் பார்த்து அதன் தரத்தை முடிவு செய்ய முடியாது என்பதைப் போலத்தான் பங்கின் மதிப்பும்.

மலிவும் தரமும்

ஓர் எளிய உதாரணத்தைப் பார்ப்போம்.

ஒரு கடையில் ₹100-க்கு ஒரு சட்டை விற்கிறது. ஆனால், அதன் துணி தரம் குறைந்ததாகவும், தையல் நேர்த்தியில்லாமலும் இருந்தால், அது ₹100-க்குக் கிடைத்தாலும் விரயம்தானே? அதே நேரத்தில், மற்றொரு கடையில் உயர்தரமான சட்டை ₹1,000-க்கு விற்கிறது; அது பல ஆண்டுகள் உழைக்கும் என்றால், அதுதானே புத்திசாலித்தனமான தேர்வு!

பங்குச் சந்தையிலும் இதுதான் நடக்கிறது. ₹100-க்கு விற்கும் ஒரு நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து, அதிகக் கடனில் மூழ்கியிருந்தால், அது 'மலிவான பங்கு' அல்ல; அது 'விலை மலிவுப் பொறி' (Value Trap).

அதேநேரத்தில், ₹10,000-க்கு விற்கும் ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 20% லாப வளர்ச்சி கண்டு, கடனே இல்லாமல், தன் துறையில் உச்சத்தில் இருக்கிறது என்றால், அது ₹10,000-ஆக இருந்தாலும் சிறந்த முதலீடுதான்.

பங்கு மதிப்பு - Share Price
பங்கு மதிப்பு - Share Price

உண்மையான 'மதிப்பு' (Intrinsic Value) என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தின் சொத்துகள், அது ஈட்டும் லாபம், எதிர்காலத்தில் அது ஈட்டப்போகும் வருமானம், அதன் கடன் அளவு மற்றும் சந்தையில் அதற்கான தேவைகள் என அனைத்தையும் கணக்கிட்டு வரப்பெறும் உண்மையான மதிப்பே 'இன்ட்ரின்சிக் வேல்யூ' (Intrinsic Value) எனப்படும்.

பங்குச் சந்தையில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், சந்தை நிர்ணயிக்கும் 'விலை'க்கும், நிறுவனத்தின் 'உண்மையான மதிப்புக்கும்' இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

• சந்தை விலை - உண்மையான மதிப்பு: அந்தப் பங்கு 'தள்ளுபடி விலையில்' (Undervalued) கிடைக்கிறது என்று அர்த்தம். இதை வாங்குவது லாபம்.

• சந்தை விலை- உண்மையான மதிப்பு: அந்தப் பங்கு 'அதிக விலையில்' (Overvalued) விற்கிறது என்று அர்த்தம். இதில் முதலீடு செய்வது ஆபத்து.

மதிப்பை அளவிடும் சில எளிய கருவிகள்

நிறுவனத்தின் உண்மையான மதிப்பை அறியப் பெரிய நிதிசார் படிப்புகள் தேவையில்லை. சில அடிப்படை அளவீடுகளைக் கவனித்தாலே போதும்:

• P/E விகிதம் (Price to Earnings Ratio): ஒரு ரூபாய் லாபம் ஈட்டுவதற்குச் சந்தை அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு விலை கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதைக் காட்டும் எண். அந்தப் பங்கின் துறையின் சராசரி P/E-யோடு ஒப்பிட்டுப் பார்த்து இது மலிவா அல்லது அதிகமா என அறியலாம்.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை: சாமானியனை கோடீஸ்வரனாக்கும் வரமா? நடுத்தெருவில் நிறுத்தும் சாபமா?
பங்கு மதிப்பு - Share Price

• P/B விகிதம் (Price to Book Value): ஒருவேளை நிறுவனம் இன்றே மூடப்பட்டால், அதன் சொத்துக்களை விற்றுப் பங்குதாரர்களுக்குக் கிடைக்கும் தொகையோடு தற்போதைய பங்கு விலையை ஒப்பிடுவது.

• வருவாய் மற்றும் லாப வளர்ச்சி: கடந்த 5 ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனையும் (Sales) நிகர லாபமும் (Net Profit) சீராக உயர்ந்து வருகிறதா என்பதைப் பார்ப்பது.

சந்தை என்னும் ஊசலாடும் மனிதன்

புகழ்பெற்ற முதலீட்டாளர் பெஞ்சமின் கிரஹாம், அவரது பிரசித்தி பெற்ற நூலான 'The Intelligent Investor'-ல், சந்தையை ‘திரு,சந்தை’ (Mr. Market) எனும் மனிதனாக உருவகப் படுத்துகிறார். இந்த மனிதனுக்கு மனநிலை அடிக்கடி மாறும்.

சில நாட்களில் அதிக உற்சாகமடைந்து, ₹500 மதிப்புள்ள பங்கை ₹1,000-க்கு விற்க முயல்வான். சில நாட்களில் தேவையில்லாத பயத்தினால், அதே ₹500 மதிப்புள்ள பங்கை ₹250-க்கு விற்க முன்வருவான்.

சந்தையின் இந்த மனநிலை மாற்றத்தைப் பயன்படுத்தி, ‘திரு. சந்தை’ பயத்தில் இருக்கும்போது உண்மையான மதிப்புள்ள பங்குகளைக் குறைந்த விலையில் அள்ளுவதே புத்திசாலி முதலீட்டாளரின் நகர்வு.

இதையும் படியுங்கள்:
ஷேர் மார்க்கெட்டில் நீங்களும் முதலாளி... Shareholder e-Voting ரகசியம் தெரியுமா?
பங்கு மதிப்பு - Share Price

உங்கள் கவனத்திற்கு

அடுத்தமுறை நீங்கள் ஒரு பங்கின் பட்டியலைப் பார்க்கும்போது, அதன் ‘விலை’யை மட்டும் பார்த்து மயங்கிவிடாதீர்கள். அதற்குப் பின்னால் இயங்கும் நிறுவனத்தின் வணிகம் என்ன, அதன் லாபம் என்ன, எதிர்கால வளர்ச்சி சாத்தியங்கள் என்ன என்பதை ஆராயுங்கள்.

விலையை மட்டும் பார்த்து முதலீடு செய்பவர் சூதாடி. மதிப்பை அறிந்து முதலீடு செய்பவரே உண்மையான முதலீட்டாளர்!

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com