

வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தால் சேமிப்பைத் தொடங்குவது கடினமாகத் தோன்றலாம். ஆனால், வாழ்க்கை முறையில் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நம்மால் சிறப்பாக சேமிக்க (Money savings) முடியும். அதற்கான அசத்தலான டெக்னிக்குகள் சிலவற்றை பார்க்கலாம்.
1. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தாலும் முதலில் சேமிப்பு, பின்பே செலவு என்ற கொள்கையை கடைப்பிடித்தால் சிறப்பாக இருக்கும். சம்பளம் வந்ததும் செலவுகள் செய்வதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட தொகையை 10-20% என தனி சேமிப்பு கணக்குக்கு மாற்றுவது சிறந்த யோசனையாக இருக்கும்.
2. SIP(Systematic Investment Plan) அல்லது RD(Recurring Deposit) போன்ற வசதிகளைப் பயன்படுத்தி நம் கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் தானாகவே பணம் சேமிப்பிற்கு செல்லும்படி அமைக்கலாம் (Automate Savings).
3. நம் வருமானத்தில் 50/30/20 என்ற விதியை கடைபிடிக்கலாம். அதாவது 50% அத்தியாவசிய தேவைகள், 30% சுற்றுலா, பொழுதுபோக்கு போன்ற விருப்பங்களுக்கும், 20% சேமிப்புக்கும் எனப் பிரித்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
4. அத்தியாவசியமான பொருட்களுக்கும், ஆசைக்காக வாங்கும் பொருட்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து தேவையற்ற விருப்பங்களை சுருக்கி கொள்ளலாம் அதாவது குறைத்துக் கொள்ளலாம்.
5. ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அதை டைரியிலோ, மொபைல் போனிலோ குறித்து வைக்க பணம் எங்கே வீணாகிறது என்பதை எளிதில் கண்டறியலாம். ஒவ்வொரு சிறிய செலவுகளையும் பதிவு செய்வதும், செய்யும் செலவுகளைக் கண்காணிப்பதன் மூலமும் தேவையற்ற செலவுகளைக் கண்டறிந்து ஒதுக்கி விடலாம். அதேபோல் விலை உயர்ந்த பொருட்களை வாங்க ஆசைப்படும் பொழுது, சிறிது நாட்கள் வாங்கும் யோசனையை ஆறப்போடுவதன் மூலம், அது உண்மையிலேயே தேவையா? என யோசிக்க வைக்கும்.
6. ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் வரவு-செலவு திட்டத்தை உருவாக்கலாம். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
7. அடிக்கடி வெளியே சாப்பிடுவதை குறைத்து கொள்வதும், வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைத்து உண்பதும் ஆரோக்கியத்துடன் பெரிய தொகையை சேமிக்கவும் உதவும். இந்த முறைகளைத் தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம், வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருந்தாலும் சிறப்பாக சேமிக்கவும் முடியும்.
8. நம் வீட்டை பராமரிக்கவும், பழுது பார்க்கும் திறன்களையும் வளர்த்துக் கொண்டால் பணத்தை நன்கு சேமிக்க முடியும்.
9. அருகிலுள்ள இடங்களுக்கு நடந்து செல்வதும், சிறிது தொலைவே உள்ள இடங்களுக்கு சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்துவதும் ஆரோக்கியத்தைத் தருவது மட்டுமல்லாமல், பெட்ரோல் டீசலுக்கு செலவாகும் பணத்தை கணிசமாக குறைத்து சேமிக்கவும் உதவும்.
10. தள்ளுபடி என்ற பெயரில் தரம் குறைந்த பொருட்களை வாங்குவதை தவிர்க்கலாம். தேவையான பொருட்களை தேவையான அளவு மட்டுமே வாங்கப் பழக வேண்டும். தள்ளுபடிக்கு மயங்கி தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவித்து அனாவசிய செலவு செய்வதை குறைக்கலாம்.