
தமிழ்நாட்டை சேர்ந்த சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனம் ஆன்லைன் வழியாக ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்ய புதிய செயலியை தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஜவுளி வர்த்தக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது சூப்பர் சரவணா ஸ்டோர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளையை தொடங்கி இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதேநேரம் வீட்டு உபயோக பொருட்களுக்கு என்று தனியாக சிறப்பு பிரிவை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
சூப்பர் சரவணா ஸ்டோரை பொறுத்தவரை சென்னையில் மிகப்பெரிய ஜவுளி கடையாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் முக்கிய பகுதிகளில் 5 கிளை என்று மிகப் பிரமாண்டமாக செயல்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் நடுத்தர மக்களுக்கு ஏற்றார் போல் விலையை நிர்ணயித்து விற்பனையில் ஈடுபட்டு வருவதால், இந்த நிறுவனம் தொடர் வெற்றிகளை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனம் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறது. இதன் நிறுவனர் ராஜரத்தினம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சூப்பர் எஸ் எஸ் மார்ட் என்ற பெயரில் ஆன்லைன் வழியாக இந்நிறுவனம் வர்த்தக செயல்பாடு தொடங்கி இருக்கிறது.
மேலும் சூப்பர் எஸ் எஸ் மார்ட் வழியாக இரு பாலருக்கும், அனைத்து வயதினருக்கும், பல்வேறு வகையான மாடல்களில் புதுப்புது ரகங்கள் உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆர்டர் செய்தக் குறுகிய காலத்தில் வீடு தேடி கொண்டு சென்று கொடுப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஜவுளி வகைகள் மட்டுமல்லாது வீட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டு சாதனங்கள், அழகு சாதன பொருட்களும் சூப்பர் எஸ் எஸ் மார்ட் வழியாக ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பெரிய நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.
சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற பெரு நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும்.