
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா, வாகன உற்பத்தி, நிதி நிறுவனம் மற்றும் மின்னணு இயந்திர தயாரிப்பு என்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி நிறுவனமாகவும் உருவாக இருக்கிறது.
தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனம் பெங்களூருவில் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் பத்தாயிரத்திற்கு அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஸ்ட்ரான் குழுமத்துடன் டாடா நிறுவனம் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் டாடா சன்ஸ் நிறுவனம் 1,040 கோடி ரூபாய்க்கு விஸ்ட்ரான் குழுமத்திடம் இருந்த ஐபோன் உற்பத்தி ஆலையை வாங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவின் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் உள்நாட்டு நிறுவனமாக டாடா நிறுவனம் மாறி இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது ஐபோன் 14 மாடலை தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு புது மாடல்களையும் அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதனால் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி மேலும் அதிகரிக்க கூடும். மேலும் போனின் விலை குறையவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருப்பது, இந்தியாவின் முதல் உள்நாட்டு ஐபோன் உற்பத்தி நிறுவனமாக மாறி இருக்கும் டாடா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். மிகப்பெரிய இலக்குகளை அடைய தொடர்ந்து செயல்படுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.