
கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஐடி உழியர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருவதாக இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வேலைக்கு சென்றால் ஒன்று அரசு வேலை அல்லது ஐடி வேலை என்று இன்றைய இளைஞர்களுடைய மனநிலை உருவாகி இருக்கிறது. ஐடி துறை அதிக அளவிலான சம்பளங்களை தருவதால் பெருவாரியான மக்கள் ஐடி துறையில் வேலைக்கு சேர, அது சார்ந்த படிப்புகளை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கனவாக ஐடி வேலை மாறி இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஐடி தொழில்நுட்ப துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்று பல லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டில் ஐடி துறையில் வேலையின்மை அதிகரித்து உள்ளதாக இந்திய தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்து வரும் இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்திருக்கும் தகவல், இந்திய இளைஞர்களின் மிகப்பெரிய நம்பிக்கை, எதிர்பார்ப்பாக உருவாகியுள்ள தகவல் தொழில்நுட்பத் துறை பல்வேறு வகையான காரணிகளால் சரிவை சந்தித்திருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மந்த நிலை, ரஷ்யா - உக்ரைன் போர், சர்வதேச பங்குச்சந்தையின் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
குறிப்பாக இந்தியாவில் செயல்படும் டி எஸ் எஸ், இன்போசிஸ், ஹெச் பி எல், விப்ரோ, டெக் மகிந்திரா, பெர்சிஸ் டென்ட் போன்ற முக்கிய 10 தொழில்நுட்ப நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாத வரையிலான காலகட்டத்தில் மட்டும் 51 ஆயிரத்து 744 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்திருக்கின்றன. செலவுகளை குறைக்கும் விதமாகவும், பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்ட நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கல்லூரிகளில் இருந்து மாணவர்களை நேரடியாக வேலைக்கு சேர்க்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முனைப்பு காட்டவில்லை, மேலும் அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் அழைப்பானை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. அழைப்பானை வழங்கப்பட்டவர்களுக்கும் பணி ஒதுக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் நடப்பு ஆண்டில் 20. 6 லட்சம் ஊழியர்கள் மட்டுமே இந்தியா முழுவதும் ஐடி தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஐடி ஊழியர்கள் எண்ணிக்கை சரிவை நோக்கி சென்று இருப்பதை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளது.