நாம் அனைவரும் முதன் முதலாக காசு சேமிக்கத் தொடங்கிய இடம் உண்டியலாகத் தான் இருக்கும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் பன்றி வடிவ உண்டியலைப் பணம் சேமிப்பதற்காகப் பயன்படுத்தி இருப்பார்கள். உண்டியலை ஆங்கிலத்தில 'Piggy Bank' என்றும் அழைக்கிறோம். காசு சேமிக்கும் உண்டியலுக்கு பன்றி வடிவம் எப்படி வந்தது? உண்டியலை 'Piggy Bank' என்று ஏன் அழைக்கிறோம் என்று இந்தப் பதிவில் காணலாம்.
600 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனி மக்கள் தங்களிடம் இருக்கும் கூடுதல் நாணயங்களை 'pygg’' எனப்படும் ஆரஞ்சு நிற களிமண்ணால் செய்யப்பட்ட பானை அல்லது ஜாடிகளில் சேமித்து வந்தார்களாம். இந்த ஜாடிகளை 'pygg pot' அல்லது 'pygg Bank' என்றும் குறிப்பிடுவார்களாம்.
அதன் பிறகு, 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த குயவர்களுக்கு இந்த ‘Pygg Banks’ செய்வதற்கான உத்தரவு கிடைத்ததாகவும், அவர்கள் இந்த வகை மண்ணைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதனால் ‘Pyggy Banks’ என்பதை 'Piggy Bank' எனத் தவறாக நினைத்து பன்றி வடிவில் சேமிப்பு பெட்டகம் அல்லது உண்டியல் செய்து ஏற்றுமதி செய்ததாக சொல்லப்படுகிறது.
இதற்குமுன் அவர்கள் செய்த உண்டியல் வடிவங்களைக் காட்டிலும், இந்த பன்றி வடிவ உண்டியல் வர்த்தக ரீதியாக உச்சத்தைத் தொட்டது என்றும், நாளடைவில் அதுவே உலகம் முழுக்க பிரபலமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதோடு, பன்றி அதிர்ஷடம் மற்றும் லாபத்தை தரும் விலங்காகக் கருதப்பட்டது. பன்றியால் முன்னோக்கி மட்டுமே நடக்க முடியும். பின்னோக்கி எப்போதும் அதனால் நடக்க முடியாது. எனவே, பன்றியை வளர்ப்பதானால், நாம் செய்யும் எல்லா செயல்களும், எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் பின்னடையாது. அதில் முன்னேற்றமே கிடைக்கும் என்றும் நம்பப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இந்த பன்றி வடிவ உண்டியலில் பணம் சேமிக்கும்பொழுது, சேமிக்கும் பணம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும் என்று குறிப்பிட்ட மக்கள் கருதியதாகவும், அதுவே, பின்னாளில் பன்றி வடிவ உண்டியல் பிரபலமடைந்ததற்கு காரணாமாகவும் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பல வித வண்ணங்களிலும், வடிவங்களிலும் விதவிதமான உண்டியல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இது பன்றி வடிவ உண்டியலின் பயன்பாட்டைக் குறைத்தாலும், குழந்தைகளை கவரும் வண்ணம் இருப்பதால், இவை அவர்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்ற வகையில் வரவேற்கத்தக்கது.