நிதித் தேவைகள் அதிகமாகி விட்ட இன்றைய நிலையில், அதனை நிவர்த்தி செய்வதற்காக வங்கிகள் அறிமுகப்படுத்தியது தான் கிரெடிட் கார்டு வசதி. அவசரத் தேவைகளில் கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அதனை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இல்லையெனில் வட்டி அதிகமாகி கடன் சுமையில் மாட்டிக் கொள்வீர்கள்.
ஒவ்வொரு வங்கியும் வாடிக்கையாளர்களைக் கவர பலவித சலுகைகளுடன் கிரெடிட் கார்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் வட்டி விகிதம் அனைத்து வங்கிகளுக்கும் மாறுபடும். நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்த நினைத்தால், சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். சரியான கிரெடிட் கார்டை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பது இங்கு பலருக்கும் தெரியாத ஒன்று தான். இருப்பினும், கவனமாக இருந்தால் இது சாத்தியமாகும்.
வட்டி விகிதம்:
கிரெடிட் கார்டில் வட்டி விகிதம் மிகவும் முக்கியமானது. பின் தொகையை நாம் தாமதமாக செலுத்தினால் வட்டி செலுத்த வேண்டும். இந்த வட்டி விகிதம் எவ்வளவு என்பதை கவனிக்காமல், சலுகைகளை மட்டுமே பார்த்து கிரெடிட் கார்டை தேர்வு செய்வது தவறாகும். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பயனாளர்களை கவர்வதற்கு பலவிதமான அறிமுகச் சலுகைகளை அளிக்கலாம். இந்த சலுகைகள் நமக்கு ஈர்ப்பை ஏற்படுத்தினாலும், அதிக வட்டி விகிதம் ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
செலவுப் பழக்கம்:
வாடிக்கையாளர்கள் முதலில் தங்களின் செலவுப் பழக்கத்திற்கு ஏற்றவாறு கிரெடிட் கார்டை தேர்வு செய்ய வேண்டும். மேலும், கார்டுக்கான ஆண்டுக் கட்டணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில கிரெடிட் கார்டுகள் அதிகப் பலனை அளித்தாலும், அதற்கு ஏற்றபடி ஆண்டுக் கட்டணமும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. ஆகவே முதலில் சலுகைகளும், கட்டணமும் நமக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு சில கிரெடிட் கார்டுகள் உணவகங்களில் செலவு செய்யும் போது அதிக பலனை அளிக்கலாம். வேறு சில கிரெடிட் கார்டுகள் எரிபொருள் பயன்பாட்டிற்கு நல்ல பலனை அளிக்கலாம். அதிகமாக வெளியில் சாப்பிடும் பழக்கம் இல்லாத பயனாளர்களுக்கு உணவக சலுகைகளை அளிக்கும் கிரெடிட் கார்டால் பயன் இல்லை. அதே சமயம், வாகனமே இல்லாத பயனாளர்களுக்கு எரிபொருள் சலுகைகள் பயன் அளிக்கும் வகையில் இருக்காது.
கவனம் தேவை:
அனைத்து கிரெடிட் கார்டுகளும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டிருக்கும். சிறிய எழுத்துகளில் இருக்கும் இவற்றை கவனமாகப் படித்துப் பார்த்த பின் கிரெடிட் கார்டின் தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சலுகை காலம், குறைந்தபட்ச தொகை மற்றும் அபராதத் தொகை உள்ளிட்ட அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும். ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பம் செய்வதும் தவறான செயலாகும். மேலும், கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.