சேமிப்பு என்பது வாழ்வின் மிக முக்கியமான ஒரு அம்சம். ஆங்கிலத்தில் சேமிப்பு என்பது சேவிங்க்ஸ் என்று அழைக்கப்படுகிறது. சே விங்க்ஸ் அதாவது Say Wings “இறக்கை என்று சொல்” என்றும் இதை பிரித்தும் பொருள் கொள்ளலாம். சேமிப்பு என்பது கழுகுக்கு இருக்கும் இறக்கைகளைப் போலத்தான். சேமிப்பு என்ற இறக்கைகள் நமக்கு முளைத்தால் நாம் வாழ்க்கை வானத்தில் ஆனந்தமாக ஒரு பறவையைப் போல பறந்து வாழலாம்.
நிறைய வருமானம் இருப்பவர்களால் மட்டுமே சேமிக்க முடியும் என்ற தவறான எண்ணம் பலரிடையே நிலவுகிறது. குறைந்த வருவாய் ஈட்டுபவராலும் சேமிக்க முடியும். இதைத்தான் பெரியவர்கள் “சிறு துளி பெரு வெள்ளம்” என்பார்கள். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு தொகையை நாம் சேமிக்கப் பழக வேண்டும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு மனிதனுக்கு இருந்தால் போதும். அந்த எண்ணம் அவனை நிம்மதியாக வாழ வைக்கும்.
சேமிப்பு என்பது வங்கியில் பணத்தை சேமிப்பது மட்டுமன்று. தினம் தினம் நீங்கள் செய்யும் செலவை எவ்வகையில் குறைக்க முடியும் என்று யோசித்து செயல்படுத்துவதும் ஒரு வகை சேமிப்புதான்.
எந்த ஒரு பொருளை வாங்கும் முன்பும் அது அன்றாட வாழ்க்கைக்கு அவசியம்தானா; அந்த பொருள் இல்லாமல் நம்மால் வாழ முடியா என்று யோசிக்க வேண்டும்.
ஒரு பொருள் எங்கு விலை குறைவாகக் கிடைக்கிறது எனத் தேடித் தேடி வாங்குவதும் ஒருவகை சேமிப்புதான்.
சில பொருட்களை வாங்கும்போது அவர் மூன்று ரூபாய் நான்கு ரூபாய் சில்லரையைத் தராமல் அதற்கு சாக்லெட் போன்ற பொருட்களைத் தரும் வழக்கம் இன்று பல வணிக நிறுவனங்களில் வழக்கத்தில் உள்ளது. இதன் மூலம் மாதம் ஒரு கணிசமான தொகையை அவர்கள் பெறுகிறார்கள் மற்றும் நீங்கள் ஒரு கணிசமான தொகையை இழக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். கடைகளுக்குச் செல்லும் போது போதிய சில்லறைகளைக் கொண்டு செல்லுங்கள். அல்லது மொபைல் மூலமாக சரியான பணத்தைச் செலுத்தும் வழக்கத்தைக் கடைபிடியுங்கள். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கணிசமான தொகை உங்களுக்கு மிச்சமாகும். இந்த பணமும் உங்கள் சேமிப்புத் தொகைதான்.
சிலர் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் யோசிக்காமல் உடனே வாங்கி விடுவார்கள். இது மிகவும் தவறாகும். வாங்கி பின்னர் அந்த பொருளை நாம் அவசரப்பட்டு வாங்கிவிட்டோமே என்று வருந்துவார்கள்.
தற்போது “முப்பது நாள் சேமிப்பு விதி” என்று ஒன்றை நிபுணர்கள் உருவாக்கி உள்ளார்கள். இதன்படி ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தீர்மானித்தால் அதை முப்பது நாட்களுக்குத் தள்ளிப் போட வேண்டும். இந்த முப்பது நாட்களில் உங்கள் மனம் மாறி அந்த பொருள் நமக்கு இப்போது தேவையில்லை; பின்னர் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழக்கூடும். தொடர்ந்து முப்பது நாட்கள் ஒரு பொருள் இல்லாமல் உங்களால் வாழ முடிகிறது என்றால் அது உங்களுக்கு அவசியமில்லாத ஒரு பொருள் என்று முடிவு செய்து அதை வாங்க வேண்டாம் என்று நீங்கள் முடிவெடுக்கக் கூடும். இந்த முப்பது நாள் சேமிப்பு விதியினைப் பின்பற்றிப் பாருங்கள். ஒரு கணிசமான தொகையை உங்களால் இதன் மூலம் சேமிக்க முடியும்.