
அமெரிக்காவின் பங்குச்சந்தையில் சக்கைப் போடு போடுகிறது வியட்நாம் நாட்டின் மின்சார சிற்றுந்து தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்டு(VINFAST) .
இந்த நிறுவனத்தை WINFAST , அதாவது வேகமாக வெற்றி கொள் என்று சொல்லலாமா என்பதைப் போல், விஸ்வரூப வளர்ச்சியை பங்குச் சந்தையில் எடுத்து வருகிறது. வின்ஃபாஸ்டு, கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி, அமெரிக்காவின் பங்குச் சந்தையில் நுழைந்தது. அது நுழைந்த போது, அதன் மதிப்பு வெறும் $24 என இருந்தது. ஒரே வாரத்தில், பட படவென 251% உயர்ந்து , தற்போது, இந்தக் கட்டுரை எழுதும் போது, அமெரிக்காவில் WINFAST நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை $45 என பங்கின் விலை அதிகரித்து, அதன் சந்தை விலை, 106.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டு விட்டு, வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இரு மடங்கு வளர்ச்சி.
போர்டு மற்றும் வோல்க்ஸ்வாகன் போன்ற பிரம்மாண்ட சிற்றுந்து நிறுவனங்களின் மொத்த மதிப்பை, இந்த பங்குச்சந்தை ஏற்றத்தினால், வின்ஃபாஸ்டு தோற்கடித்துவிட்டது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வின்ஃபாஸ்டு நிறுவனத்தின் 99% பங்குகளை அதன் முதலாளி பாம் நாட் வோயங்(Pham Nhat Vuong) தான் வைத்துள்ளார். மீதமுள்ள 1% பங்குகளுக்குத் தான் இத்தகைய போட்டி, அமெரிக்க பங்குச்சந்தையில் நிலவுகிறது.
கிட்டத்தட்ட 13 லட்சம் பங்குகள் மட்டுமே, பங்குச் சந்தையில் உள்ளன. அதனை வாங்குவதற்கு அமெரிக்கர்கள் போட்டி போடுகின்றனர். குறிப்பிடப்பட வேண்டிய அம்சம், பாம் நாட் வோயங்தான் வியட்நாமின் மிகப்பெரிய பணக்காரர். வின்ஃபாஸ்டு மூலம், நாளுக்குநாள் அவரது சொத்து மதிப்பு கூடிக் கொண்டே செல்கிறது. ஒரே வாரத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கூடிவிட்டது.
இந்தப் பங்கு வளர்ச்சி, ஆறு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வின்ஃபாஸ்டு நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் நிதி திரட்டுவதற்கு உதவியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தன்னிடமுள்ள மற்ற 99% பங்குகள் சில சதவிகிதங்களை பங்கு சந்தைக்கு கொண்டு வரவும் வாய்ப்புள்ளதாக, நிறுவனம் தெரிவித்துள்ளது.மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்டா போன்ற நிறுவனங்களை ஆரம்பத்தில் மக்கள் கண்டும் காணாமல் விட்டு விட்டனர்.
பின்னர், டெஸ்லா ஜாம்பவான் பங்காக வளர்ந்தது. அதன் காரணமாக, இந்தப் பங்கினை அமெரிக்கர்கள் விட்டுவிடக் கூடாது என்று வாங்க முண்டியடிக்கின்றனர். இதனை ஆங்கிலத்தில், Fear of missing out, என்று கூறுவார்கள். அதாவது, விட்டு விடக் கூடாதே என்கிற பயம் என்று பொருள்.இத்தனைக்கும், வின்ஃபாஸ்டு கடந்த ஆண்டு 24 ஆயிரம் மின்சார சிற்றுந்துகளை மட்டுமே விற்றது. 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தினை சந்தித்தது.
ஆனால், இதையெல்லாம், அமெரிக்கர்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. வின்ஃபாஸ்டு குறித்த பெரும் நம்பிக்கையுடன் வாங்கி குவிக்கின்றனர். வின்ஃபாஸ்டு நிறுவனத்திற்கு அதன் சொந்தக்காரர் வோயங் அவர்களின் ஆசிர்வாதம் உள்ளது. அவர் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதற்குக் கொடுக்க முன்வந்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில், வடக்கு கரோலினாவில் தனது புதிய தொழிற்சாலைக்குப் பூமி பூஜை போட்டது வின்ஃபாஸ்டு.
டெஸ்லா போன்ற மின்சார வாகன ஜாம்பவான் இருக்கும் இடத்தில் ஏன் நுழைந்தீர்கள் என்று வின்ஃபாஸ்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி தை லே(Thuy Le) அவர்களிடம் கேட்டால், அதன் காரணமாகவே இங்கு நுழைந்தோம் என்கிறார். அமெரிக்கா கடினமான, சவாலான சந்தை. இங்கு எங்களால் முடிந்தால், எங்கும் எங்களால் முடியும். என்கிறார்.ஆனால், பங்குச்சந்தையில் இத்தகைய அதீத ஏற்றங்கள் ஆரம்பத்தில் இருந்து, பின்னர் தங்களது சந்தை மதிப்பில் 80% இழந்த நிறுவனங்கள் உண்டு. வின்ஃபாஸ்டு நிறுவனத்திற்கு என்ன ஆகிறது என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டும்.