கடந்த நிதியாண்டின் காலாண்டு பகுதியை விட, நடப்பு நிதியாண்டின் காலாண்டு பகுதியில் வோடஃபோன் நிறுவனத்தின் நிகர இழப்பீடு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் இருந்து வந்தன. ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பிறகு ஏர்செல் போன்ற பல நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய சேவையை நிறுத்திக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வோடஃபோன், ஐடியா நிறுவனங்களும் தொடர்ந்து சரிவை சந்திக்க நேரிட்டது.
இதனால் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்த வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், வோடஃபோன் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நடப்பு நிதியாண்டு காலாண்டு பகுதி வரையிலான காலகட்டத்தில் வோடஃபோன் நிறுவனத்தின் இழப்பீடு அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரையிலான காலாண்டு பகுதியில் இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு 7,840 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த இழப்பீடு மிகப்பெரிய சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
2022 - 23 நிதியாண்டின் காலாண்டு பகுதியில் நிகர இழப்பீடு 7,275.7 கோடியாக இருந்தது. தற்போதைய நிதியாண்டில் அது மேலும் அதிகரித்து இருக்கிறது. அதேசமயம் அந்த நிறுவனத்தின் காலாண்டு மதிப்பு வருவாய் 10,406.8 கோடியில் இருந்து 2.3 சதவீதம் அதிகரித்து 10 ஆயிரத்து 655.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் குறுகிய முன்னேற்றம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்துக்கு சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடமிருந்து 128 ரூபாயிலிருந்து 139 ரூபாயாக வருமானம் உயர்ந்துள்ளதாகவும் அந்தச் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் மதிப்பு வருவாய் உயர்ந்து இருந்தாலும், அதைவிடக் கூடுதலாக நிகர இழப்பு அதிகரித்து வருவது நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஏற்றதாக அமையாது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.