
உலகளவில் மிகப்பெரிய பொருளாதாரச் சந்தையாக பங்குச்சந்தை கருதப்படுகிறது. பெரு முதலீட்டாளர்கள் பலரும் இதில் தான் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். சாதாரண மனிதர்களால் பங்குச்சந்தை முதலீட்டை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் பங்குச்சந்தை ஏற்ற இயக்கத்தை தொடர்ந்து கவனித்து வந்தால், ஓரளவு புரிதல் ஏற்படும். இருப்பினும் முதலீடு செய்யத் தொடங்கினால் தான் பங்குச்சந்தையின் மாயாஜாலத்தை புரிந்து கொள்ள முடியும்.
பங்குச்சந்தையின் ராஜாவாக திகழும் வாரன் பஃபெட்டை பலருக்கும் தெரிந்திருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தே இவர் இன்று பெரும் பணக்காரராக மாறியிருக்கிறார். அவ்வகையில் பங்குச்சந்தையை நாம் எப்படி கையாள வேண்டும் என வாரன் பஃபெட் கூறிய ஆலோசனையை இப்போது பார்ப்போம்.
பங்குச்சந்தையைப் பொறுத்தவரை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து வந்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். சந்தை ஏற்ற இறக்கத்தை நாம் கணக்கில் கொள்ளக் கூடாது. ஏனெனில் இது அடிக்கடி நடக்கக் கூடிய ஒன்று தான். இந்நேரத்தில் பங்குகளை விற்பது தான் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு என சுட்டிக் காட்டியுள்ளார் வாரன் பஃபெட்.
பங்குச்சந்தை என்பது ஒரு நீண்டகால விளையாட்டு. இதில் தொடர்ந்து விளையாடினால் தான் இலாபத்தைப் பார்க்க முடியும். இதற்கு தொடர் பயிற்சியும், புத்திசாலித்தனமான திட்டமும் வேண்டும் என கருதுகிறார் பஃபெட்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குச்சந்தையில் லாபம் ஈட்டி வரும் பஃபெட்டின் அடிப்படைத் தத்துவத்தை அவ்வளவு எளிதில் நம்மால் புரிந்து கொள்ள இயலாது. இருப்பினும் அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு முதலீடு செய்தால் நிச்சயமாக லாபத்தை ஈட்டலாம்.
சந்தை வீழ்ச்சி அடையும் சமயத்தில் பல முதலீட்டாளர்கள் முதலீட்டைக் காப்பாற்றிக் கொள்ள தங்களது பங்குகளை குறைந்த விலைக்கு விற்று விடுகின்றனர். ஆனால் வாரன் பஃபெட் மட்டும் இந்த நேரத்தில் தான் அதிகளவில் பங்குகளை வாங்கிக் குவிப்பார். ஏனெனில் இந்த சமயத்தில் தான் பங்குகள் குறைந்த விலையிலும், தள்ளுபடியிலும் கிடைக்கும்.
சந்தை ஏற்ற இறக்கம் என்பது தற்காலிகமானது. அதே நேரத்தில் பங்குச்சந்தையில் நாம் வாங்கும் பங்குகளை சொந்தம் கொண்டாடவும் இயலாது. ஆகையால் நீண்ட கால இலாபத்தை அனுபவித்த பிறகு, சரியான நேரம் பார்த்து பங்குகளை விற்று விட வேண்டும். இதைத் தான் வாரன் பஃபெட் செய்து வருகிறார்.
பங்குச்சந்தை முதலீடு குறித்து வாரன் பஃபெட் கூறுகையில், “யாராக இருந்தாலும் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற பயம் இருக்கும். முதலீட்டின் மீதான இந்த பயத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பங்குச்சந்தையைப் பற்றி ஆர்வத்துடன் நீங்களே ஆராய்ந்து படிக்கத் தொடங்குங்கள். தொடக்கத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அதனை எல்லாம் கண்டு கொள்ளாது, முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டு பங்குச்சந்தையில் விளையாடுங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். சந்தை சரியும் போது முதலீட்டை நிறுத்தாமல், அதிகப்படுத்துங்கள்” என்று அவர் கூறினார்.
வாரன் பஃபெட் போல நீங்களும் ஒரு சிறந்த பங்குச்சந்தை முதலீட்டாளராக வளர நினைத்தால், சந்தை வீழ்ச்சி அடையும் சமயத்தில் முதலீட்டைப் பெருக்குவது அவசியம்.