ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு கிடைக்கும் பணத்தை மிகவும் ஜாக்கிரதையாக கையாள்வது அவசியம். ஓய்வூதிய பணத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம். இந்த பதிவில் ஒரு நபர் தன் ஓய்வூதிய பணத்தில் தவிர்க்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
1. அதிக ஆபத்துள்ள முதலீடுகள்:
நிலையற்ற பங்குகள், 'ஸ்பெக்குலேட்டிவ் வென்சர்ஸ்' எனப்படும் ஊக வணிகங்கள் அல்லது கிரிப்டோகரன்சிகள் போன்ற அதிக ஆபத்துள்ள சொத்துக்களில் அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இவை அதிக வருவாயை அளிக்கும் அதே வேளையில், குறிப்பிடத்தக்க இழப்புகளின் அபாயத்துடன் இருக்கின்றன. எனவே அவற்றை தவிர்ப்பது நலம். இல்லையென்றால் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
2. எல்லா பணத்தையும் ஒரே முதலீட்டில் போடுவது:
பொதுவாக, ஒரே முதலீட்டில் எல்லா பணத்தையும் போடக்கூடாது. பல விஷயங்களில் முதலீடு செய்வது தான் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு எதிராக போர்ட்ஃபோலியோவைப் பாதுகாக்க முயலும்.
3. பண வீக்கத்தை புறக்கணித்தல்:
பண வீக்கத்தை ஒருவர் ஒருபோதும் புறக்கணிக்க கூடாது. தான் முதலீடு செய்துள்ள பணம், பணவீக்கத்திற்கு ஏற்றவாறு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை நடத்துவதற்கு மிகவும் கடினமாகிவிடும்.
4. மருத்துவச் செலவுகளை புறக்கணிப்பது:
ஒருவர் தனது மருத்துவ சம்பந்தமான செலவுகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஓய்வூதியத்தில் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட போதுமான காப்பீடு மற்றும் சேமிப்பை வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
5. நீண்ட கால திட்டமிடாமை:
தற்போது மனிதர்களின் வாழும் காலம் கூடி உள்ளது. எனவே அதற்கு ஏற்ப ஓய்வூதிய சேமிப்புகள் நீடித்ததாக இருக்க வேண்டும். நீண்ட காலம் வாழ்வதற்கு ஏற்ற மாதிரியான பணத்தை சேமித்து வைத்திருப்பது அவசியம்.
6. மோசடிகளில் சிக்குவது:
பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்களை குறி வைத்து நிறைய மோசடிகள் நடக்கின்றன. வயதானவர்கள்தானே, என்ன செய்து விட முடியும் என்கிற எண்ணத்துடன் ஓய்வு பெற்றவர்களை அணுகி ஆசை வார்த்தைகளுக்கு பேசி தவறான முதலீட்டில் ஈடுபட செய்யுமாறு மனிதர்கள் ஆசை காட்டலாம். எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் சட்டபூர்வமான தன்மையை சரி பார்த்து நம்பகமான நிதி ஆலோசகர் உடன் கலந்து ஆலோசித்த பின்பு முதலீடு செய்வது நல்லது.
7. கடன் வாங்குதல்:
ஓய்வூதிய பணத்தில் குறிப்பிடத்தக்க புதிய கடனை வாங்குவதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கேட்கிறார்களே என்று அவசரப்பட்டு கடன் பெற வேண்டாம். அது நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம்.
8. அவசர நிதி இல்லாமல் இருப்பது:
எப்போதும் ஒருவர் அவசர தேவைகளுக்கு என ஒரு குறிப்பிட்ட அளவில் நிதியை ஒதுக்கி வைத்திருப்பது அவசியம். அதுவும் வயதானவர்களுக்கு மிக மிக அவசியம். மருத்துவச் செலவு அல்லது எதிர்பாராத பிற செலவுகள் ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கு என்று கையிருப்பு அவசியம். இதை வேற எந்த செலவுகளுக்காகவும் எடுக்கக் கூடாது.
9. வரவுக்கு மீறி செலவு:
மாதாந்திர பென்ஷன் தொகைக்கு மீறிய வாழ்க்கை முறையை வாழக்கூடாது. வாங்கும் பென்ஷன் தொகையில் 40% மட்டுமே செலவு செய்து விட்டு மீதியை அப்படியே சேமிக்க வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு அதற்கு ஏற்ற மாதிரியான பட்ஜெட்டை உருவாக்கி அதை ஒட்டி வாழ்வது மிக அவசியம்.
10. மாற்றங்கள் குறித்த தெளிவின்மை:
வரிச்சட்டங்கள் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பலன்கள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இவை ஓய்வூதிய வருமானம் மற்றும் செலவுகளை பாதிக்கும்.