நாம் ஏன் காப்பீடு எடுக்க வேண்டும்?

நாம் ஏன் காப்பீடு எடுக்க வேண்டும்?

னி மனித நிதியில் இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று பணத்தைப் பெருக்குவது = முதலீடு செய்ய வேண்டும் இரண்டு சேர்த்த பணத்தைப் பாதுகாப்பது = காப்பீடு செய்ய வேண்டும். இரண்டுமே முக்கியம் என்றாலும், முதலீட்டை விட காப்பீடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 

முதலீட்டை விட காப்பீடு முக்கியம் ஏன்?

முதலீடு இல்லாவிட்டால் கூட, மாதா மாதம் சம்பளத்தினைக் கொண்டு நாட்களை நகர்த்த முடியும். காப்பீடு இல்லையெனில், திடீர் செலவின் போது, பெரும் கடனில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

பயணம் செல்ல ஒருவர் வாகனம் வாங்குகிறார் என்றால், வாகனம் மூலமாக நீண்ட தூரத்தினை குறைந்த நேரத்தில் கடக்க முடியுமென்றாலும், தலைக்கவசம் இல்லாவிட்டால், ஏதேனும் விபத்து நேர்ந்தால், வாகனம் மட்டுமல்ல, வாகனம் ஓட்டுபவரின் உயிரையும், அவரது பிரதானமான தலையினையும் காப்பது தலைக் கவசமே. அதைபோல், காப்பீடானது, தனிமனித நிதி என்ற பயணத்தில் விபத்துக்கள் நேர்ந்தால் இத்தனை நாள் சேமித்த, பெருக்கிய செல்வத்தினை காக்க உதவுகிறது.

காப்பீடு குறைந்த பணத்தில் அதிக பாதுகாப்பினைக் காப்பீடு அளிக்கிறது

குறைந்த பணத்தில் அதிக பாதுகாப்பினைக் காப்பீடு அளிக்கிறது.‌ காப்பீடானது ஒருவர் தாங்கும் அளவை விட, பெரிய செலவுகளை எளிதில் சமாளிக்க உதவுகிறது. இதன் மூலம், திடீரென ஏற்படும் பெரும் செலவுகளை எளிதில் சமாளிக்க உதவுகிறது. யாரிடமும் கையேந்தாமலும், மேலும், இது வரை சேமித்த, முதலீட்டு பணத்தினை எடுக்காமலும், கையாள உதவுகிறது. காப்பீடு இல்லையெனில், இதுவரை செய்த சேமிப்பு, முதலீட்டு முயற்சிகள் வீணாகி, மறுபடியும் அடிப்படையிலிருந்த தொடங்க நேரிடும் அல்லது கடனாளி ஆக நேரிடும்.

உதாரணமாக, ஒரு இருசக்கர வாகனம் ஓட்டுபவர் வருடம் 800 ரூபாய் கட்டினால், அவருக்கு கிடைக்கும் காப்பீடானது, சேதமான அவரது வாகனத்திற்கு திரும்பும் வாங்குமளவிற்கு, நல்லதொரு தொகை தருகிறது. மேலும், மூன்றாவது நபரின் சொத்துக்களின் பாதிப்பிற்கு 7.5 லட்ச ரூபாய் வரை நஷ்ட ஈடு தருகிறது. வாகனம் ஓட்டுபவரின் விபத்து காப்பீடு 15 லட்சம் வரை கிடைக்கிறது.

எந்தெந்த காப்பீடுகள் அவசியமானவை?

காப்பீடு என்பது மிகவும் அவசியமானது. ஒருவருக்கு எந்த விஷயம் மிகவும் முக்கியமோ, அந்த விஷயங்களுக்கு காப்பீடு செய்துக் கொள்ளலாம். தொழிற்சாலையில் உபகரணங்கள் இல்லாவிட்டால், தொழில் நடக்காது. அவற்றை காப்பீடு செய்துக் கொள்ளலாம். தனி மனிதர்கள் எது தங்களது எதிர்காலத்திற்கு மிக முக்கியமோ அவற்றை காப்பீடு செய்துக் கொள்ளலாம். எல்லாரும் கண்டிப்பாக, காலவரையுள்ள காப்பீட்டினையும்(Term insurance), மருத்துவக் காப்பீட்டினையும்(Health insurance), வாகன காப்பீட்டினையும்(vehicle insurance) வைத்திருக்க வேண்டும்.

முக்கியமான காப்பீட்டு வகைகள் என்ன?

1.ஆயுள் காப்பீடு: சம்பாதிக்கும் நபர் இறந்துவிட்டால், குடும்பத்தின் நிதி நிலைமையை சமாளிக்க உதவும்.

2.வாகன காப்பீடு: வாகனம் விபத்துக்குள்ளானால், அது சம்பந்தமான செலவுகளை சமாளிக்க உதவும்.

3.மருத்துவ காப்பீடு: உடல் நலம் சம்பந்தமான பல்வேறு பெரிய செலவுகளை சமாளிக்க உதவும்.

4.வீடு காப்பீடு: வீடு தீப்பிடித்தால் அல்லது வீட்டின் பொருட்கள் திருடப்பட்டால், மறுபடி வீட்டினை சீரமைக்க உதவும்.

உதாரணமாக, ரியல் மாட்ரிட் கால்பந்து ஆட்டக்காரர் ரொனால்டோ, தனது கால்களை 144 மில்லியன் டாலர்களுக்கு காப்பீடு செய்து வைத்துள்ளார். அவருக்கு அவரது கால்கள் எதிர்காலத்தின் மீதான மிக முக்கிய அம்சம் என்பதனால், அதிக தொகைக்கு காப்பீடு செய்துள்ளார். எனவே காப்பீடு எடுத்துக் கொண்டு எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com