கடன்களில் இரண்டு வகைகள் உண்டு.
அடமானம் சார்ந்த கடன் - உதாரணமாக, வீட்டுக் கடன், தங்கநகைக் கடன் போன்றவை.
அடமானம் அற்ற கடன் - உதாரணமாக, தனிநபர் கடன், கடனட்டை கடன் போன்றவை.
இப்போது இந்த கடன்களை வாங்கியவர் இறந்து விட்டால் வங்கி அதை எவ்வாறு கையாளும் என்று பார்ப்போம்.
கடனாளி வாங்கிய கடனில் கூட்டுக் கடனாளி யாராவது இருந்தால் அவர்கள் இனிமேல் அந்தக் கடனுக்கு பொறுப்பாவார்கள்.
கடனாளியின் கடனுக்கு யாராவது உத்திரவாதம் கொடுத்திருந்தால் , அவர்கள் இனிமேல் அந்தக் கடனுக்கு பொறுப்பாவார்கள்.
வாங்கிய கடனுக்கு காப்பீடு இருந்தால், கடனாளி இறக்கும் பட்சத்தில் காப்பீடு நிறுவனமானது கடன் பாக்கியை கட்டிவிடும்.
தனி நபர் மட்டுமே கடன் வாங்கிய பட்சத்தில் வங்கி எவ்வாறு கையாளும் என பார்ப்போம்:
அடமானம் சார்ந்த கடன்:
கடனாளி இறந்து விட்டால் அடமானப் பொருளை ஜப்தி செய்து, அதன் மூலம் வங்கி பணத்தை ஈட்டப் பார்க்கும். கடனாளியின் வாரிசுதாரர்கள் அடமானப் பொருளை இழக்க வேண்டாம் என்று நினைத்தால் கடனை அடைத்து அடமான பொருளை காத்துக் கொள்ளலாம். கடனாளியின் வாரிசுகளுக்கு கடனாளியின் வழியாக பெற்ற பிதுரார்ஜித சொத்துக்கள் வரை மட்டுமே கடனுக்கு பொறுப்பு. அதற்கு மேற்பட்ட கடனுக்கு அவர்கள் பொறுப்பு அல்ல. கடனாளியின் கடன் ஒரு லட்சம் ரூபாயாக இருந்து, அவரது வாரிசு கடனாளியின் இறப்பின் வழியாக பெற்ற பணம் 50,000 ரூபாய் எனில் வங்கியானது கடனாளியின் வாரிசுதாரிடம் இருந்து 50,000 ரூபாய் மட்டுமே பெற முடியும். ஏனென்றால், பிதுரார்ஜிதமாக பெற்ற சொத்தின் அளவிற்கு மட்டுமே கடனாளியின் வாரிசுகள் பொறுப்பாவார்கள்.
அடமானம் அற்ற கடன்:
இங்கு வங்கி அடமானப் பொருளைக் கொண்டு பணம் ஈட்ட முடியாது. கடனாளியின் வாரிசுதாரர்கள் கடனாளி இறப்பின் வழியாக பெற்ற பிதுரார்ஜித சொத்தில் இருந்து கடனை மீட்க முயலும். அதற்கு மேற்பட்ட கடனுக்கு கடனாளியின் வாரிசுதாரர்களிடமிருந்து வங்கியால் பணத்தை வசூலிக்க முடியாது.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால்,
எந்த ஒரு கடனுக்கும் உத்திரவாதம் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் கடனாளியால் கட்ட முடியாத பட்சத்தில் நாம் தான் அதற்கு பொறுப்பு.
கடனை சீக்கிரம் அடைத்து விட வேண்டும். கடனை அடைக்காத பட்சத்தில் நமது வாரிசுகளுக்கு நாம் விட்டுச் செல்லும் பொருட்கள் கூட கடன் செலுத்த செலவாகிவிடும்.
கடனை அடைக்காத பட்சத்தில் அடமானப் பொருள் வங்கியால் பறிக்கப்பட்டால் குடும்பம் மிகவும் கஷ்டப்படும். உதாரணமாக வீட்டு கடனில், கடன் அடைக்காத பட்சத்தில் குடும்பம் வீட்டை இழக்க நேரலாம். எனவே ஆயுள் காப்பீடு எடுத்து வைப்பது அவசியம். அதன் மூலம் குடும்பம் அடமான பொருளை மீட்டுக் கொள்ள முடியும்.
கடன்கள் வாங்குவதைத் தவிர்ப்போம். வாங்கும் பட்சத்தில் சீக்கிரம் அடைத்து விடுவோம். கடன் இல்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.