

குடும்ப பட்ஜெட் (Family Budget) என்பது நம் குடும்பத்தின் வருமானம், செலவுகள் மற்றும் சேமிப்புகளை நிர்வகிப்பதற்கான ஒரு நிதி திட்டமாகும். இது பணத்தை புத்திசாலித்தனமாக செலவழிக்கவும், எதிர்கால தேவைகளுக்காக சேமிக்கவும், நிதி இலக்குகளை அடையவும், அவசர காலங்களுக்கு தயாராகவும், பணத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறவும் உதவுகிறது.
குடும்ப பட்ஜெட்டை உருவாக்குவது எப்படி?
வருமானத்தை கணக்கிடுவது:
நம் கையில் கிடைக்கும் நிகர வருமானத்தை(Net Income) முதலில் பட்டியலிடவும். இதில் நம் குடும்பத்தின் அனைத்து வருமான ஆதாரங்களையும் சம்பளம், பகுதி நேர வேலைகள், முதலீடுகள் போன்றவற்றை பட்டியலிடவும்.
செலவுகளை பட்டியலிடுவது:
மாதாந்திர செலவுகளை வீட்டு வாடகை, மளிகை, போக்குவரத்து, இன்சூரன்ஸ், பொழுதுபோக்கு மற்றும் கடன் தொகைகளை(கடன் அட்டை,கார் லோன், அடமானம்) போன்றவற்றை பட்டியலிடவும். அத்தியாவசிய தேவைகள் என்னென்ன,நம்முடைய விருப்பங்கள் எவை, சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றை பட்டியலிடுவது நல்லது. செலவுகளை உடனுக்குடன் பதிவு செய்ய wallet or money manager போன்ற செயலிகளை பயன்படுத்தலாம்.
செலவுகளை வருமானத்துடன் ஒப்பிடுவது:
குடும்பம் வளரும் பொழுது செலவுகள் பணத்தைவிட வேகமாக குவிக்கின்றன. இதனால் பட்ஜெட் போடுவதன் மூலம் பணத்தின் மீது கட்டுப்பாட்டை கொண்டு வரலாம். மொத்த வருமானத்திலிருந்து மொத்த செலவுகளைக் கழித்து, மீதமுள்ள தொகையைக் கண்டறிய வேண்டியது அவசியம். இப்படி செய்வதன் மூலம் பணம் மிச்சமிருக்கிறதா அல்லது பற்றாக்குறை உள்ளதா என்பதை சரி பார்க்க முடியும்.
இலக்குகளை நிர்ணயிப்பது:
சேமிப்பு, முதலீடு, கல்வி, விடுமுறை போன்ற நிதி இலக்குகளை வரையறுக்கவும். அதிக வட்டிக்கொண்ட கிரெடிட் கார்டு கடன்களை முதலில் அடைக்க முன்னுரிமை கொடுப்பதும், தேவையற்ற EMI மூலம் பொருட்கள் வாங்குவதை குறைக்கவும் செய்யவும்.
கண்காணித்து சரி செய்ய வேண்டியது:
மொத்தமாக மாதத் தொடக்கத்தில் மளிகைப் பொருட்களை வாங்குவது பணத்தை சேமிக்க உதவும். தேவையற்ற மின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் மாதாந்திர கட்டணத்தை குறைக்கலாம். ஒவ்வொரு மாதமும் நம் செலவுகளை கண்காணித்து, பட்ஜெட்டை மறுஆய்வு செய்து புதுப்பிக்கவும். சிறுசேமிப்பு கூட எதிர்காலத்தில் பெரிய உதவியாக இருக்கும். முக்கியமாக பட்ஜெட் பற்றி குடும்ப உறுப்பினர்களுடன் வெளிப்படையாக பேசுவது நல்லது. குடும்ப பட்ஜெட் தயாரிக்கும் பொழுது குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்தவும். குடும்ப பட்ஜெட் என்பது நம் பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்கவும், நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும்.