இந்தியாவில் கிரிப்டோகரன்சி சட்டப்படி குற்றமில்லை! ஆனால்... ஆபத்தானது!

Cryptocurrencies
Cryptocurrencies

நீங்கள் கடையில் ஒரு பொருளை வாங்குகிறீர்கள், பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்துக் கொடுக்கிறீர்கள். கடைக்காரர் அதை வாங்கிக்கொண்டதும் உங்களுடைய பணப் பரிமாற்றம் நிறைவடைகிறது.

இந்தப் பரிமாற்றத்தின் அடிப்படை என்ன என்று சிந்தித்தால், நீங்கள் கொடுத்த அந்தத் தாளுக்கு இருக்கும் மதிப்புதான். அது வெறும் தாளாக இல்லாமல், ஓர் அரசாங்க அமைப்பால் ஒப்புதல் அளிக்கப்பட்ட, ஒரு குறிப்பிட்ட மதிப்பைக் கொண்ட தாளாக இருப்பதால்தான் கடைக்காரர் அதை ஏற்றுக்கொண்டார்.

உண்மையில், இந்தப் பரிமாற்றத்துக்குத் தாள்கூடத் தேவையில்லை. நீங்கள் கடன் அட்டை (கிரெடிட் கார்டு), பற்று அட்டை (டெபிட் கார்டு) அல்லது UPI, வங்கிப் பரிமாற்றம் போன்றவற்றைப் பயன்படுத்தி அதே பத்து ரூபாயைக் கடைக்காரருக்கு வழங்கலாம். அவர் தாளை நம்பியதுபோல், இந்தப் பரிமாற்றங்களையும் நம்புவார், ஏற்றுக்கொள்வார். ஏனெனில், இவை அனைத்தும் அதேபோன்ற குறிப்பிட்ட மைய அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன, உறுதிசெய்யப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக உலகெங்கும் நிதிப் பரிமாற்றம் இப்படித்தான் நடந்துவந்துள்ளது. சமீபத்தில்தான் அந்தக் கணக்கை மாற்றிப்போடும்வகையில் கிரிப்டோகரன்சிகள் அறிமுகமாகியுள்ளன.

'கரன்சி' என்றால் நாணயம், அது நமக்குத் தெரியும். அதென்ன கிரிப்டோ?

நீங்களும் நானும் ஒரு ரகசியச் செய்தியைப் பரிமாறிக்கொள்கிறோம். அப்போது நமக்கு நடுவில் இன்னொருவர் இருக்கிறார். ஆனால், நாம் பேசும் செய்தி அவருக்குப் புரிவதில்லை. ஏனெனில், நாம் இருவரும் இப்படிச் சொன்னால் இப்படிப் பொருள் என்கிற ஒரு தனிப்பட்ட ஏற்பாட்டைச் செய்துகொண்டுள்ளோம். அது அந்த மூன்றாம் நபருக்குத் தெரியாததால் அவரால் நம் செய்தியைப் புரிந்துகொள்ளவோ தவறாகப் பயன்படுத்தவோ இயலாது.

இங்கு நீங்கள், நான், அந்த மூன்றாம் நபர் ஆகியவர்களுக்குப் பதில் மூன்று வெவ்வேறு கணினிகள் அல்லது மென்பொருள் அமைப்புகளை நினைத்துக்கொள்ளுங்கள். இப்படி இருவர் பரிமாறிக்கொள்ளும் டிஜிட்டல் செய்திகள் மூன்றாம் நபர்களுக்குப் புரியாதபடி மாற்றுவதுதான் Cryptology (குறியாக்கவியல்). அதன் சுருக்கம்தான் கிரிப்டோ. அதன் அடிப்படையில் அமையும் டிஜிட்டல் நாணயம்தான் கிரிப்டோகரன்சி.

இதையும் படியுங்கள்:
மாத சம்பளம் வாங்க போறீங்களா பாஸ்? இந்த 5 விஷயங்கள நோட் பண்ணுங்க!
Cryptocurrencies

அதாவது, கிரிப்டோகரன்சி என்பது கணினி அமைப்புகளுக்கிடையில் பரிமாறிக்கொள்ளப்படுகிற ஒரு டிஜிட்டல் அல்லது மெய்நிகர் (Virtual) நாணயம். அதை யாரும் அச்சடிப்பதோ கையில் எடுத்து இன்னொருவருக்குக் கொடுப்பதோ இல்லை. உங்களுடைய டிஜிட்டல் பணப்பையிலிருந்து அது என்னுடைய டிஜிட்டல் பணப்பைக்கு வந்துவிடும். அது எப்படி உங்கள் பணப்பைக்கு வந்தது, எப்படி அங்கிருந்து பயணம் செய்து என்னை நோக்கி வந்தது, எப்படி என்னுடைய பணப்பையில் சேமிக்கப்பட்டது, இதில் மூன்றாம் நபர் யாரும் தலையிடாதபடி எப்படி உறுதிசெய்யப்பட்டது ஆகிய அனைத்தும் குறியாக்கவியல் உத்திகளின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்படுகின்றன.

வழக்கமான நாணயம் அரசாங்கங்களால் வெளியிடப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், கிரிப்டோகரன்சியைத் தனியார் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இது பிளாக்செயின் (Blockchain) என்னும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மையமாக்கப்படாத வலைப்பின்னல்களில் (Decentralized Networks) கட்டுப்படுத்தப்படுகிறது.

கிரிப்டோகரன்சி என்றதும் பெரும்பாலானோர் பிட்காயினைத்தான் (Bitcoin) நினைக்கிறார்கள். ஆனால், வேறு பல கிரிப்டோகரன்சிகளும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மதிப்பு விரைவாக ஏறி, இறங்குவதால் இதை ஒரு முதலீட்டு வாய்ப்பாகக் கருதிப் பலரும் இதில் வந்து விழுகிறார்கள். ஆனால், அந்த விரைவான ஏற்ற, இறக்கங்கள் தங்களுடைய முதலீட்டை முழுமையாக அழித்துவிடக்கூடும் என்கிற ஆபத்தை அவர்கள் உணர்வதில்லை.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி பயன்பாடோ முதலீடோ சட்டப்படி குற்றமில்லை. ஆனால், அதை முழுக்கப் புரிந்துகொள்ளாமல், சிந்திக்காமல் இறங்குவது, கையிலிருக்கும் மொத்தப் பணத்தையும், குறிப்பாக, உடனடியாக ஏதேனும் ஒரு தேவைக்கு எடுத்துவைத்திருக்கிற பணத்தையெல்லாம் அதில் போடுவது, கிரிப்டோகரன்சியில் பணம் சம்பாதித்துத் தருகிறேன் என்று சொல்கிறவர்களை நம்புவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com