ஊறவச்சு ஊறுகா போடாதீங்க மக்களே! உடனே நாமினேஷன் செய்யுங்க!

Nomination
Nomination
Published on

நாமினேஷன் என்பது என்ன? நாமினேஷன் செய்யவில்லையா? உடனே நாமினேஷன் செய்யுங்க...

வங்கி மற்றும் அஞ்சல்துறை அலுவலகங்களில் நம்மில் பலர் சேமிப்புக் கணக்கு (Savings Bank Account) மற்றும் வைப்புநிதிக் கணக்கு (Fixed Deposit Account) முதலானவற்றை வைத்திருக்கிறோம். இத்தகைய கணக்குகளில் நீங்கள் நாமினேஷன் செய்து வைப்பது மிக மிக அவசியம். சரி நாமினேஷன் என்றால் என்ன? அதை ஏன் நீங்கள் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.

நீங்கள் வங்கியிலோ அல்லது அஞ்சல் அலுவலகத்திலோ சேமிப்புக் கணக்கையோ அல்லது வைப்புநிதி கணக்கையோ தொடங்க விரும்பினால் ஒரு விண்ணப்பத்தைத் தருவார்கள். அதன் பின்பக்கத்தில் Nomination என்றொரு பகுதி கட்டாயம் இருக்கும். இதைப் பற்றி பலர் கவலைப்படுவதில்லை. என்ன என்று யோசிப்பது கூட இல்லை. 

விஷயத்திற்கு வருவோம். நீங்கள் உங்கள் சேமிப்பு அல்லது வைப்புநிதிக் கணக்கில் ஒரு தொகையை சேமித்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் காலத்திற்குப் பிறகு கணக்கில் இருக்கும் அந்த தொகையானது நீங்கள் விரும்பும் நபர் சட்டபூர்வமாக பெற்றுக் கொள்ள நீங்கள் செய்யும் ஒரு முன்னேற்பாடே 'நாமினேஷன்' என்று அழைக்கப்படுகிறது.

நீங்கள் நாமினேட் செய்யும் நபர் பெற்றோர், மனைவி, குழந்தைகள், உடன் பிறந்தோர், உறவினர் என யாராகவும் இருக்கலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. விண்ணப்பப்படிவத்தில் நாமினேட் செய்யும் நபரின் பெயர், வயது, ஆதார் எண், முகவரி மற்றும் உறவுமுறை முதலான விவரங்கள் மட்டுமே இருக்கும்.  பதினெட்டு வயதிற்குட்பட்ட நபரான ஒரு மைனரையும் நீங்கள் நாமினியாக நியமிக்கலாம். மைனர் நாமினியாக இருந்தால் ஒரு மேஜரை அவருக்கு பாதுகாவலராக நியமித்து அவருடைய முழுப்பெயர், வயது, முகவரி மற்றும் உறவு ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இதை நிரப்புவதற்கு மூன்றே நிமிடங்கள் போதும்.  

இதையும் படியுங்கள்:
மிகச் சரியான ஃபண்டுகளை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்?
Nomination

ஒரு வேளை நீங்கள் யாரையும் நாமினேட் செய்யாமல் அந்த இடத்தை வெற்றிடமாக விட்டு விட்டால் உங்கள் காலத்திற்குப் பிறகு அந்த தொகையானது உங்கள் மனைவி பிள்ளைகளுக்கு சேரும். திருமணமாகாதவராக இருந்தால் பெற்றோருக்குச் சேரும். அதற்கு அவர்கள் வாரிசு சான்றிதழைப் பெற்று பல ஆவணங்களைச் சமர்ப்பித்து மிகவும் சிரமப்பட்டு அந்த தொகையைப் பெற நேரிடும். இந்த சிக்கல்களைத் தவிர்க்க நீங்கள் நாமினேட் செய்வது மிக மிக அவசியம். ஒரு கணக்கிற்கு ஒருவரை மட்டுமே நாமினேட் செய்யமுடியும். பல நிதிக் கணக்குகளை நீங்கள் பராமரித்தால் ஒவ்வொரு கணக்கிற்கும் நீங்கள் விரும்பும் வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களை நாமினேட் செய்யலாம். ஒரு கணக்கிற்கு ஒருவரை நாமினேட் செய்தால் அந்த கணக்கில் இருக்கும் பணம் மட்டுமே அவரைச் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வங்கி லாக்கருக்கும் நீங்கள் ஒரு நாமினியை நியமிக்கலாம்.   

சரி. ஒருமுறை நாமினேட் செய்து விட்டீர்கள். நாமினியை மாற்ற விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். நீங்கள் விரும்பினால் எந்த சமயத்திலும் அந்த கணக்கிற்கு வேறு யாரையாவது நாமினேட் செய்ய முடியும். இதற்கென உள்ள படிவத்தை நீங்கள் நிரப்பி கையொப்பமிட்டு வங்கி அல்லது அஞ்சல்துறை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களை உங்கள் கணக்கில் அப்டேட் செய்து விடுவார்கள்.

உங்கள் வங்கி அல்லது அஞ்சல் துறை சேமிப்புக் கணக்கு அல்லது வைப்புநிதி (Fixed Deposit) என எந்த ஒரு கணக்கு பாஸ் புத்தகத்தையோ அல்லது வைப்புநிதிச் சான்றிதழையோ உடனே எடுத்துப் பாருங்கள். அதில் Nomination என்று குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள் அந்த கணக்கிற்கு நாமினேஷன் செய்திருந்தால் அதில் YES என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.  நாமினேஷன் செய்யவில்லை என்றால் அதன் அருகில் NO என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.  வைப்பு நிதி சான்றிதழில் நாமினேட் செய்தவரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!
Nomination

நீங்கள் இப்போதே இதையெல்லாம் சரிபார்த்து ஒருவேளை நாமினேட் செய்யவில்லை என்றால் உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கோ அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கோ சென்று அதற்கான விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து கொடுத்துவிடுங்கள்.  

நாமினேஷன் குறித்த உங்கள் சந்தேகங்களை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல்துறை அலுவலரிடம் விசாரித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com