

உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் முதலீடு டோக்கன் தங்கம் (Token gold) தான். டோக்கன் தங்கம் என்பது பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் (Blockchain technology) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தங்கத்தை குறிக்கும் ஒரு டோக்கன் ஆகும். இது உண்மையான தங்கத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், உடல் ரீதியான தங்கத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமின்றி தங்கத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது.
இந்த டோக்கன்களைப் பயன்படுத்தி தங்கத்தை சிறிய அளவுகளில் வாங்கலாம், விற்கலாம் மற்றும் வர்த்தகம் செய்யலாம். இது பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது. இவை டிஜிட்டல் பரிமாற்றங்களில் அல்லது கிரிப்டோகரன்சி துறையில் பயன்படுத்தப்படுகிறது.
1. டோக்கன் தங்கத்தின் (Token gold) முக்கிய அம்சங்கள்:
டிஜிட்டல் வடிவம்:
இது ஒரு டிஜிட்டல் சொத்தாகும். அதாவது டிஜிட்டல் முதலீட்டு முறையாகும். முதலீட்டாளர்கள் தங்கத்தை உடல் ரீதியாக வைத்திருக்காமல் டிஜிட்டல் டோக்கன்களாக வைத்திருக்கலாம். இது நம் போனில் அல்லது கணினியில் சேமிக்கப்படலாம்.
உண்மையான தங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது:
ஒரு டோக்கன் குறிப்பிட்ட அளவு உண்மையான தங்கத்திற்கு சமம். இது பாதுகாப்பான பெட்டகங்களில் சேமிக்கப்படுகிறது.
பிளாக்செயின் தொழில்நுட்பம்: Blockchain technology
இது வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்கிறது. இதனால் தங்கம் டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாப்பாக வாங்கப்பட்டு, விற்கப்பட்டு, சேமிக்கப்படுகிறது.
பகுதி உரிமை:
நாம் தங்கத்தின் முழுமையான கட்டியை வாங்க வேண்டிய அவசியமில்லை. டோக்கன் வழியாக அதன் ஒரு பகுதியையும் சொந்தமாக்கலாம்.
போர்ட்டபிலிட்டி:
உடல் ரீதியாக தங்கத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமின்றி மின்னணு முறையில் பரிவர்த்தனை செய்யலாம்.
நிலையான மதிப்பு:
தங்கம் வரலாற்று ரீதியாக நிலையான முதலீடாக இருப்பதால், டோக்கன் தங்கத்தின் மதிப்பும் பெரும்பாலும் நிலையானதாக இருக்கும். தனி நபர்கள் தங்கத்தை பரிமாறிக் கொள்ளவும், குறிப்பிட்ட பரிசுகளை வாங்கவும் இந்த டோக்கன்களை பயன்படுத்தலாம்.
பல நிறுவனங்கள் டிஜிட்டல் தங்க நாணயங்களை வெளியிடுகின்றன. ஒவ்வொன்றும் தங்கம் போன்ற அதே மதிப்பை வைத்திருக்கும் யூனிட்களில் பயனர்கள் ஒருவருக்கொருவர் பணம் செலுத்த ஒரு அமைப்பை வழங்குகிறது.
2. இவற்றின் நன்மைகள்:
திருட்டு, மோசடி மற்றும் இழப்பு போன்ற உடல் ரீதியான தங்கத்தின் அபாயங்களை இதன் மூலம் தவிர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு தங்கம் ஒரு எளிதான முதலீட்டு வழியாகிறது. தங்கத்தை எளிதாக வர்த்தகம் செய்யலாம், பணம் செலுத்தலாம் அல்லது பிற டிஜிட்டல் சொத்துக்களாக மாற்றலாம்.
3. டோக்கன் தங்கம் vs டிஜிட்டல் தங்கம்:
டோக்கன் தங்கம் என்பது ஒரு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் டோக்கன்களாக மாற்றப்பட்ட தங்கமாகும். அதே சமயம் டிஜிட்டல் தங்கம் என்பது பரந்த சொல்லாகும். இதில் டோக்கனைஸ் செய்யப்பட்ட தங்கம், Gold ETFகள் மற்றும் பிற ஆன்லைன் தங்க முதலீட்டு முறைகள் அனைத்தும் டிஜிட்டல் தங்கத்தின் கீழ் வரும்.