
தங்கம்... இந்த பெயரை கேட்டாலே இந்திய பெண்களின் முகத்தில் ஒளிவீசும். அந்தளவிற்கு தங்கத்தின் மீதான மோகம் நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம் உள்ளது என்பதை மறுக்க இயலாது. தங்கம் ஒரு அழகான, மதிப்புமிக்க உலோகம் மட்டுமின்றி அது அலங்கார ஆடம்பர பொருளாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. சில பெண்கள் தங்கத்தை அழகுக்காகவும், சிலர் திருமணத்திற்கு சேர்த்து வைப்பதற்காகவும், வேறு சிலர் முதலீடாகக் கருதியும் வாங்குகிறார்கள்.
கடந்த மாதம் கடைசி 10 நாட்கள் தங்கத்தின் விலை கணிசமாகச் சரிந்து ஜூன் 30-ம்தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8915க்கு விற்ற நிலையில் மீண்டும் அதிகரித்து ஜூலை 1ம் தேதி யூடர்ன் போட்டு இன்று ஒருகிராம் ரூ.9105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு ஏற்ற இறக்கத்துடனே தங்கம் விலை நிலையில்லாமல் காணப்படுகிறது.
நம் நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் பெண்களின் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது என்றே சொல்லாம். மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தான் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளதாக சர்வே கூறுகிறது.
தங்கத்தின் மீதான அதீத மோகத்திற்கு என்ன தான் காரணம் என்று அலசினால், ஆசையும், கௌரவமும் என்ற இரண்டு விஷயங்கள் தான் நம் கண் முன் வந்து நிற்கிறது. பலரும் இங்கே மற்றவர்கள் பார்வைக்கு வசதியாக வாழ்கிறோம் என்பதைக் காட்டுவதற்காகவே தங்கத்தை அதிகளவில் வாங்கிக் குவிக்கிறார்கள். ஒரு சிலர் இதையும் தவிர்த்து வருங்கால சேமிப்பிற்கான சிறந்த முதலீடாகவும் தங்கத்தைப் பார்க்கின்றனர்.
பொதுவாக நாம் தங்கத்தை நகை , நாணயம் மற்றும் கட்டிகள் போன்ற வடிவங்களில் வாங்குகிறோம். தற்போதுள்ள காலகட்டத்தில் தங்கம் வாங்கி சேமிப்பது லாபம் என்றாலும், அதிகளவு அதில் முதலீடு செய்வது ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
நேரடியாக தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்வதை தவிர்த்து, அதற்கு பதிலாக தங்க இ.டி.எஃப் (Gold ETFs) மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் போன்றவற்றில் முதலீடு செய்வதே எதிர்காலத்தில் அதிகளவு நன்மை தரும் என்றும் கூறும் நிபுணர்கள், தங்கம் காலப்போக்கில் தனது மதிப்பை தக்க வைத்துக் கொண்டாலும், அது மற்ற முதலீடுகள் போல வேகமான ரிட்டர்ன் தரக்கூடிய முதலீடு அல்ல என்றும் எச்சரிக்கின்றனர்.
சேமிப்பு என்று நினைத்து தங்கம் வாங்கும் போது, அதில் 20-30% சேதாரம் மற்றும் இதர கட்டணங்களும்(செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி) சேர்க்கப்படுவதால் அதனால் ஏற்படும் நஷ்டக்கணக்கை மக்கள் கவனத்தில் கொள்ள மறந்து விடுகின்றனர். ஏனெனில் இதுபோன்ற கட்டணங்கள், தங்கத்தை மறு விற்பனை செய்யும் போது மீண்டும் நமக்குக் கிடைப்பதில்லை. முன்பு 10-12% இருந்து செய்கூலி, சேதாரம், தற்போது 30-35% ஆக அதிகரித்து விட்டது. அதுமட்டுமின்றி வாங்கிய தங்கத்தை சில வருடங்கள் கழித்து மாற்றும் போதோ அல்லது விற்பனை செய்யும் போதோ வியாபாரிகள் தங்கத்தின் தூய்மை மற்றும் இதர காரணங்களை காட்டி சந்தை விலையை விட குறைவாகவே தருவார்கள். அத்துடன் தங்க நகையை மாற்றி வேறு நகை வாங்கும் போது கிடைக்கும் பணத்தை விட அதை விற்பனை செய்யும் போது தங்கத்தின் முழுமதிப்பில் பாதியளவு மட்டுமே கிடைக்கிறது.
அதனை தொடர்ந்து சிலர் தங்க பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால் இது லாபகரமான முதலீடாக இருந்தாலும் இதிலும் ஆபத்துகள் இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு முன், அது குறித்த தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தங்கத்தை பொறுத்தவரை குறுகியகால முதலீடுகள் அதிகளவு பலன் தராது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீண்டகால தேவைக்கு தங்கத்தை முதலீடு செய்வது ஒரளவுக்கு பலன் அளிக்கும் என்றே வல்லூநர்கள் கூறுகின்றனர்.
தங்கம் நகை மற்றும் தங்க பத்திரம் வாங்குவது என எந்த மூதலீடாக இருந்தாலும், முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் நிதி நிலைமை மற்றும் உங்களின் நோக்கம் போன்றவறை கருத்தில் கொண்டு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுப்பதே சிறந்தது.