

இன்று நாட்டிலும், உலகிலும் எல்லா உற்பத்தி பொருட்களுக்கும் (Manufacturing products) போட்டி உண்டாகி இருப்பதை காண்கிறோம். ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டும், விலை குறைத்தும் விளம்பரம் செய்தும் வேறு வழிகளை கையாண்டும் தத்தம் பொருட்களை சந்தையில் விற்பனை செய்ய முயல்வதை காண்கிறோம். எனவே, உற்பத்தியாளர்கள் தம் பொருட்கள் மற்றவற்றுடன் உண்டாகும் போட்டியில் நன்கு விற்பனையாக வேண்டுமானால் அவர்கள் பல நல்ல வழிகளை கையாள வேண்டும். அதில் முக்கியமானவை இதோ.
உற்பத்திச் செலவைக் குறைத்தல் (Reducing cost of production)
பயன் திறத்தைப் பெருக்கல் (Increasing utility of products)
பயன்படுத்தும் செலவினைக் குறைத்தல்
விற்பனை விளக்கம் விரிவாக்கல்
புது நுண்திறன் வழி வளமாக்கல்
புது வருவாய் பெருக்கல்
புதுத் துறைகளை வளர்த்தல்
இணைப் பொருட்கள் உற்பத்தியும் உபயோகமும்
இவ்வாறான துறைகளில் நாட்டில் உற்பத்தியாளர்கள் கருத்தை செலுத்துவார்களேயானால் அவர்களின் பொருட்கள் சந்தையில் நன்கு விற்பனையாகி நாட்டு வாணிபவளன் பெருக வாய்ப்பு உண்டு. மேலை நாடுகளில் பல உற்பத்தியாளர்கள் இதைப் போன்ற பல முறைகளை கையாண்டு உலக அரங்கிலே பெரும் வர்த்தகர்களாக உள்ளதை காணலாம். சிறப்பாக மோட்டார் உற்பத்தி போன்ற பெரும் தொழில்களிலும், அதன் துணைப் பொருட்களாகிய பெட்ரோல் போன்றவற்றிலும் இந்த நிலையை காண்கின்றோம். நம் நாட்டிலும் அந்த நிலையை கொண்டு வந்துள்ளனர்.
சில உற்பத்தியாளர்கள் தத்தம் தொழில்களைப் பெருக்க பல்வேறு வகையில் தாம் விற்பனைக்கு அனுப்பும் பொருட்களுடன் பல விளக்கங்களை அனுப்பவும், வேறு முறைகளுடன் முயற்சிகளையும் மேற்கொள்வர்.
மேலை நாடுகளில் ஒவ்வொரு உற்பத்தியாளரும் தன் உற்பத்தி பொருட்கள் பயன்படும் இடங்களுக்கு நேராகச் சென்று அவை பயன்படும் நிலையையும், முறைகளையும் இணையும் திறனையும் கண்டு அவற்றை பயன்படுத்தும் மக்களிடம் அப்பொருட்களின் உபயோகத்தில் உள்ள குறைபாடுகளை கேட்டு அறிவார்கள். குறைபாடுகள் இருப்பின் அவற்றை எவ்வாறு அடுத்து வரும் உற்பத்தியில் நீக்க முடியும் என ஆராய்ந்து அவற்றை செம்மை செய்வர். அவை நன்கு இலங்குமாயின் அவை மேலும் சிறக்க வழி என்ன என ஆராய்வர்.
பெரும் பொருட்கள் மட்டுமின்றி சாதாரண உணவுப் பொருள், சோப்பு முதலிய உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் கூட இத்தகைய ஆராய்ச்சி செய்வர். இதனால் பயன்படுத்தும் மக்கள் பலர் அறிமுகமாவதோடு, அவர்களும் தொடர்ந்து இதே பொருளை உபயோகிக்க வழியையும் தேடிக் கொள்ளுகின்றனர்.
நம் நாட்டில் தற்போது சில உற்பத்தியாளர்கள் சில பெண்களை அமர்த்தி வீடு வீடாகச் சென்று தத்தம் பொருளை அறிமுகப்படுத்துகிறார்களேயன்றி தாமாகவே நேரில் சென்று ஆராய்ந்து தொழில் செய்ய முனைவது கிடையாது. அதனால் பல தொழில்கள் வளர்ச்சி அடைய முடியாமல் போகின்றன. தையல் இயந்திரம் தயாரிப்பவர் சிலர் தவணையில் வாங்க அதை கொடுப்பதோடு தங்கள் ஆட்களை சில நாட்களுக்கு வாங்குபவர் வீடுகளுக்கு அனுப்பி இலவசமாக பயிற்சி பெற உதவுகின்றனர். இத்தகைய நிலை ஏற்பாட்டால் வர்த்தகம் ஓரளவு வளர்ந்து வருவதையும் காண்கின்றோம்.
உற்பத்தி துறையில் பல நல்ல தன்மைகளை கண்டு தெரிய வேண்டும். உற்பத்தி முறையைப் பெருக்கத் தேவையான இடங்களில் பெருக்கியும், தேவையற்ற இடங்களில் சுருக்கியும் நல்ல பொருட்களை குறைந்த விலையில் நாட்டு மக்களுக்கு அனுப்ப வேண்டும். அதுதான் மக்களை தம் பொருட்களுக்கு திருப்பும் வழி.
அதே சமயத்தில் நாட்டில் நல்ல தரமும் பண்பாடும் கெடாத வகையில் பொருட்கள் மக்கள் உள்ளங்களை ஏற்கின்றனவாக அமைய வேண்டும். நல்ல வண்ணங்களோடு கூடிய கண்கவர் பொருளாக அவை அமைந்தால், சிறப்புடையதாக இருக்கும். எடுத்துக்காட்டாக சோப்புகளை அழகழகான வண்ணங்களில் தயாரிக்கிறார்கள். இதை மக்கள் விரும்பி ஏற்ற பிறகு சந்தை அவர்களுடையதாக மாறிவிடுகிறது தானே.
இடையில் அப்பொருட்களை வைத்து வர்த்தகம் செய்கின்றவர்களும் மகிழ்ச்சியோடு அதே பொருட்களை மக்களுக்கு அறிமுகம் செய்து, விற்பனையை அதிகமாக்கி, தாமும் லாபம் அடைந்து உற்பத்தி பெருக்கத்துக்கும் வழி செய்தவர்களாவர்.
அதுபோல் பெரும் கனரக தொழிற்சாலை அதிபர்களும், பல இயந்திரங்களையும் அவற்றின் உறுப்புகளையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உரிமையாளர்களும், நீடித்த உழைப்பு திறன், குறைந்த விலை, சிக்கனம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்தால், அவர்களின் பொருட்களே நாட்டில் பெரும்பான்மை விற்பனையாகும். இவற்றை வாணிபம் செய்வோர் விரும்பி செய்து வாங்குபவர்களிடமும் நற்பெயர் எடுக்கலாம்.