
உலக பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதன் மூலம் அந்த நிறுவனத்தினுடைய வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். அதேபோல் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை முன்னேற்றம் அடையும்.
தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர் மாநாட்டு ஜனவரி 7, 8 ஆகிய இரு நாட்கள் நடத்துகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே சமயம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஏன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்ற கேள்வி ஏற்படும். அந்நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவான சூழல் எவ்வாறு இருக்கிறது? அவற்றின் மூலம் அந்த நிறுவனங்களுக்கும், தமிழ்நாடும் அடையப்போகும் பயன்கள் என்ன என்பவற்றை தமிழ்நாடு அரசு உலக நிறுவனங்களுக்கு விளக்கி பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருகிறது.
இவ்வாறு தமிழ்நாடு அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க ஏதுவான இடத்தை அமைத்துத் தருகிறது. தடையற்ற மின்சாரம், தடையற்ற தண்ணீர் வசதி, வரிச்சலுகைகள், மானியங்கள் ஆகியவற்றை முதல்கட்டமாக விளங்குகிறது. மேலும் தற்போது பெரும் தொழில் நிறுவனங்கள் உலகில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக வருவாய் இழப்பை சந்திக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான சூழல் தொழில் வளர்ச்சிக்கு ஏதுவாக அமைகிறது. பாதுகாப்பும் சிறப்பான ஒன்றாக இருப்பதால் தமிழ்நாடு நம்பத் தகுந்த மாநிலமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் சாலை, விமானம், கடல் வழி என்று அனைத்து போக்குவரத்திலும் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டு இருக்கிறது.
மேலும் தமிழ்நாட்டில் 20 வினாடியில் ஒரு கார் தயாரிக்கப்படுகிறது. 90 வினாடியில் ஒரு வணிக வாகனம் தயாரிக்கப்படுகிறது. மேலும் 170 சதவீத ஆட்டோ மொபைல்ஸ் ஏற்றுமதி தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் 10 மின் வாகனங்களில் 7 தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜவுளித்துறை உற்பத்தியில் இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு வர்த்தக நடவடிக்கையை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. இந்தியாவில் தோல் ஏற்றுமதியில் 45 சதவீதப் பங்களிப்பை தமிழ்நாடு செலுத்துகிறது. இயந்திர சாதன உற்பத்தியில் இந்தியாவின் 18 சதவீத செயல்பட தமிழ்நாடு கொண்டிருக்கிறது.
மோட்டார் பம்ப் உற்பத்தியில் 40 சதவீத பங்களிப்பை செலுத்துகிறது. டயர் உற்பத்தி மற்றும் பல்வேறு வகையான தொழில் நுட்பஙக்ளிலும் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கல்வி அறிவு தொடர் வளர்ச்சியை கண்டு வருகிறது. மேலும் பல்வேறு திறன் வளர்க்கும் பயிற்சி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழங்கப்படுவதால் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 5 ஆயிரம் காப்புரிமைகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது.
இப்படி பல்வேறு வகைகளில் தமிழ்நாடு முன்னேற்றத்தைக் கண்டு வளர்ச்சியின் பாதையில் இருப்பதால் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற, நம்பிக்கையான இடமாக தமிழ்நாடு விளங்குகிறது.