கிராஜூவிட்டி தொடர்பாக ஊழியர்கள் பலருக்கும் 5 ஆண்டுகள் முழுமையாக பணி புரிந்தால் தான் இதற்கு தகுதி பெற முடியுமா என்ற சில குழப்பங்கள் இன்றளவும் இருந்து வருகிறது. இந்தக் குழப்பத்தை தீர்த்து வைக்க முயல்கிறது இந்தப் பதிவு.
மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் சிலர் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய அதிக சம்பளத்தை எதிர்பார்த்து பணி மாறுதலை மேற்கொள்கின்றனர். இருப்பினும், சில ஊழியர்கள் மட்டும் ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்வதுண்டு. இப்படி நாம் ஒரே நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் வேலை செய்யும் போது கிராஜூவிட்டி பெறும் தகுதியை அடைய முடியும். பொதுவாக 5 ஆண்டுகள் பணி புரிந்தால் மட்டுமே கிராஜூவிட்டி பெறத் தகுதி பெற முடியும் என பலருக்கும் தெரியும். ஆனால், 5 ஆண்டுகளுக்கு குறைவாக பணி புரிந்தாலும் கிராஜுவிட்டிக்குத் தகுதி பெறலாம் என்பது பலரும் அறியாத உண்மை.
அரசு வகுத்துள்ள சட்டம் 1972-ன் படி, ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்தால் கிராஜூவிட்டியைப் பெற தகுதி பெறுவார். இருப்பினும் ஊழியர் பணி மாறுதல் அல்லது அவசரச் சூழ்நிலை காரணமாக 4.8 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக பணியாற்றி இருந்தாலும் கிராஜூவிட்டி பெறும் தகுதி உண்டு. பணி செய்து கொண்டிருக்கும் வேலையை விட மற்றொரு நல்ல வேலைவாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கும் பட்சத்தில், அவர் 5 ஆண்டுகள் முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை; 4.8 ஆண்டுகளே போதுமானது என்பதால் கிராஜூவிட்டியை அளிக்க நிறுவனத்திடம் முறையிடலாம்.
கிராஜூவிட்டி தொடர்பாக அரசு மூன்று முக்கிய விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகளை அனைத்துப் பணியாளர்களும் தெரிந்து கொள்வது நல்லது.
1. ஒரு பணியாளர் ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகால பணியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
2. வாரத்திற்கு 5 நாள்கள் வேலை கொண்ட நிறுவனம் என்றால், கிராஜூவிட்டியைப் பெற 4 ஆண்டுகள் 190 நாட்களும் போதுமானது.
3. வாரத்திற்கு 6 நாள்கள் வேலை கொண்ட நிறுவனம் என்றால், கிராஜூவிட்டியைப் பெற 4 ஆண்டுகள் 240 நாட்களும் போதுமானது.
கிராஜூவிட்டி சட்டம் 1972, சட்டப்பிரிவு 4(2) இன் படி ஊழியர் 4 ஆண்டுகள் 6 மாதம் வேலை செய்தாலே கிராஜூவிட்டியைப் பெறும் தகுதியை அடைந்து விடுவார். வேலையில் இருந்து விலகும் ஊழியர் 30 நாள்களுக்குள் கிராஜூவிட்டியைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். தற்காலிக முறையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு கிராஜூவிட்டி கிடையாது.
கிராஜூவிட்டி தொடர்பாக தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எச்.ஆர். சுகண்யாவிடம் கேட்ட போது, அவரும் 4.8 ஆண்டுகள் வேலை செய்தாலே கிராஜூவிட்டியைப் பெற முடியும் என்ற அரசு சட்டம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கிராஜூவிட்டி கணக்கீடு:
5 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.20,000-ஐ மாதச் சம்பளமாக பெற்றால், அவருக்கான கிராஜூவிட்டி கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படும்.
கிராஜுவிட்டி = கடைசியாக வாங்கிய சம்பளம் x (15/26) x பணியாற்றிய மொத்த ஆண்டுகள்.
கிராஜுவிட்டி = 20,000 x (15/26) x 5 = ரூ.57,692