
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.
சஞ்ஜிப் பானர்ஜி 2023 நவம்பர் 1-ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில் தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு கடிதம் அனுப்பினர். அக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டதாவது:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான சஞ்ஜிப் பானர்ஜி அனுபவம் மிக்கவர். எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
–இவ்வாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. ஆனால், அவரது இடமாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சஞ்ஜிப் பானர்ஜி விரைவில் மேகலாய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியில் சேரப்போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பணியிட மாற்றமாகிப் போகும் தலைமை நீதிபதிகளுக்கு அளிக்கும் பிரிவுபசார விழாவைத் தவிர்த்துவிட்டு, சஞ்ஜிப் பானர்ஜி இன்று சென்னையிலிருந்து கிளம்பி தன் சொந்த ஊரான கொல்கத்தா கிளம்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
(சஞ்ஜீப் பானர்ஜி, கொல்கத்தா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி)