ஓவர் சென்டிமெண்ட்

ஓவர் சென்டிமெண்ட்
Published on

இணையத் தளத்தில் வெளியாகியிருக்கும்
'உடன்பிறப்பே' திரைப்படம் – ஒரு பார்வை

– ராகவ் குமார்

சென்டிமெண்ட் உடன்பிறப்பு : 'பாசமலர்', 'கிழக்குச் சீமையிலே', 'முள்ளும் மலரும்' போன்ற அண்ணன் – தங்கை சென்டிமெண்ட் பட வரிசைகளில் வந்துள்ள படம் உடன்பிறப்பே. அண்ணனாக சசிகுமாரும், தங்கையாக ஜோதிகாவும் நடித்து இருக்கிறார்கள். அண்ணன் வைரவன், தங்கை மாதங்கி, தங்கையின்  கணவர் வாத்தியார் சமுத்திரக்கனி என அனைவரும் கூட்டு குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். எதிர்பாரத விதமாக மாதங்கி – வாத்தியார் தம்பதிகளின் மகன் இறந்துவிட, இறப்பிற்கு மச்சான் வைரவன்தான் காரணம் என்று எண்ணி, வாத்தியார் கூட்டு குடும்பத்தை விட்டுப் பிரிகிறார். பிரிந்த இந்த இரு குடும்பங்கள் மீண்டும் ஒன்று சேர, இரு வீட்டு ஜோடிகளுக்குள் அரும்பும் காதல் ஒரு காரணமாக அமைகிறது. தங்கை மாதங்கி குடும்பதையும் ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். இந்த முயற்சி நிறைவேறியதா என்பதை டைரக்டர் நிறைய சென்டிமெண்ட், ஆக்‌ஷன், காமெடி கலந்து சொல்லி இருக்கிறார். நடிப்பில் ஜோதிகா நிறையவே ஸ்கோர் செய்கிறார். மகனை இழந்த சோகத்தை கண்களில் வைத்துக்கொண்டே, பல்வேறு எமோஷன்களை காட்டுகிறார். இதுவரை ஜோ இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தது இல்லை. சசி அமைதியும், முன்கோபமும் கொண்டவராக வருகிறார். இதுபோன்று சசிகுமாரை பல படங்களில் பார்த்து விட்டதால் பெரிதாக ஈர்க்கவில்லை. சமுத்திரக்கனி நிறைய அட்வைஸ் செய்யாமல் குறைவாக செய்கிறார். சூரி வழக்கம்போல் விசுவாசமான காமெடி நண்பன்.

காமெடிக்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார்.வேல்ராஜின் கேமரா வேங்கை வாசலின் பசுமையையும், காய்ந்த மண்ணையும் ஒருசேர படம்பிடித்து அழகியலைக் கூட்டுகிறது. இந்தப் படம் சாதியை கொண்டாடவில்லை. ஆனால், ஜாதிய விழுமியங்களைக் கொண்டாடி உள்ளது. தப்பென்றால் யாராக இருந்தாலும் அடிப்பது, பெரிய தலைக்கட்டு, ஒரே ஜாதிக்குள், உறவுக்குள் திருமணங்களை ஊக்கப்படுத்துவது இப்படி சில அம்சங்கள் படத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜாதி, மதம் தாண்டி படங்கள் தமிழ் சினிமாவில் வந்துக் கொண்டு இருந்தது. ஆனால் ஊர் பெருமை, குல பெருமை பேசும் இதுபோன்ற படங்கள் வருவதால் இளம் டைரக்டர்கள் பூடகமாக ஜாதியை தூக்கிப் பிடிக்கிறார்களோ என சந்தேகம் வருகிறது.

உடன்பிறப்பே : ஓவர் சென்டிமெண்ட்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com