எதற்கும் துணிந்தவன்! தீயவர்களுக்கு எமன்!

எதற்கும் துணிந்தவன்! தீயவர்களுக்கு எமன்!

-ராகவ் குமார். 

இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாகும் விஷயத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு எந்தளவு உள்ளது என்பதைச் சொல்கிறது 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம்.

"பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள், சமூகத்தை பார்த்து ஒருபோதும் பயப்பட வேண்டியது இல்லை. இதை செய்யும் கயவர்கள்தான் பயப்பட வேண்டும்" என்று ஆணிதரமாக சொல்லிருக்கிறார் டைரக்டர் பண்டிராஜ். ,

வடநாடு மற்றும் தென் நாடு என்று இரண்டு ஊர்கள். இதில் தென்னாட்டில்  வக்கீலாக நடிகர் சூர்யா. (கண்ணபிரான்). படத்தில் அவரது அப்பா சத்யராஜ் மற்றும் அம்மா சரண்யா.! வடநாட்டில் மந்திரி மகனான வினய் தன் நண்பர்கள் மூலமாக தென்னாட்டில் உள்ள இளம் பெண்களுக்கு காதல் வலை விரித்து, அந்தரங்கங்களை படம் பிடித்து பிளாக் மெயில் செய்கிறார்.

இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. இதற்கு காரணம் வினய் என்று கண்டுபிடித்து நெருங்குவதற்குள் – சூர்யா குடும்பத்தில் உள்ள நபர்களின் அந்தரங்கங்களை வினய் வெளியிடுகிறார். இப்பிரச்சனை என்ன ஆனது.. சூர்யா இதை எப்படி எதிர்கொண்டார்.. குற்றவாளிகள் தண்டிக்க பட்டார்களா.. என்று கதை நீள்கிறது.

முதல் பாதி கதையில் கிராமம், காதல் என்று சுற்றினாலும் இரண்டாவது பாதியில் சொல்ல வேண்டியதை சிறப்பாக சொல்லி நம்மை ஈர்க்கிறார். குற்றவாளிகளுக்கு தரும் தண்டனை சரிதான் என்று ரசிகர்கள்  நம்மையே யோசிக்கவைப்பதில்  டைரக்டர் வெற்றி பெற்றுள்ளார். ஆக்ஷன் கலந்த வக்கீலாக சூர்யா அமர்க்களபடுத்தி உள்ளார். ஆற்றாமை, கோபம், தவிப்பு என நவரங்களில் சூர்யாவின் நடிப்பு அமர்க்களம்! ப்ரியங்கா காதலில் அழகாகவும், பிரச்சனையின் போது இன்னும் அழகாகவும் தெரிகிறார். சத்யராஜ், சரண்யா அப்பா அம்மாவாக வந்து  வாழ்ந்து இருக்கிறார்கள். வினய் ஹாண்ட்சம் வில்லன். ஸ்டைல் மற்றும் டெரர் நடிப்பில் மிரட்டுகிறார்.

இமானின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. ரத்னவேலுவின்  கேமரா நம்மை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளேயே அழைத்து செல்கிறது. இப்படத்தின் பல காட்சிகள் பொள்ளாச்சி சம்பவததை நினைவுகூறுகிறது.

 "ஆம்பள பையன் அழக்கூடாதுன்னு சொல்லி வளர்க்கறதை விட பொம்பள பிள்ளையை அழவைக்காதன்னு சொல்லி வளருங்க" என்ற டயலாக் ஆழம். தொழில்நுட்பம் வளர்ந்ததை விட மனிதமனங்களின் வக்ரம் வளர்ந்து உள்ளது என்பதை சரியாக சொல்கிறது இப்படம்.

எதற்கும் துணிந்தவன் -தீயவர்களுக்கு எமன்!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com