வந்தியத்தேவனுக்காக ஜப்பானில் இருந்து பறந்துவந்த ரசிகர் கூட்டம்!

வந்தியத்தேவனுக்காக ஜப்பானில் இருந்து பறந்துவந்த ரசிகர் கூட்டம்!

வந்தியத்தேவனை காணவேண்டும் என்ற ஆவலுடன் ஜப்பானில் இருந்து ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் 2ம் பாகம் வெளியாகி உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 'பொன்னியின் செல்வனு'க்கான ரசிகர்கூட்டம் என்பதையும் தாண்டி, பொன்னியின் செல்வனின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான ரசிகர்கூட்டம் என்பது உலகளவில் இருக்கிறார்கள் என்பது தற்போது ஒரு நிகழ்வைப் பார்க்கும்போது தெரியவருகிறது.

அதன்படி, நடிகர் கார்த்தியின் 'வந்தியத்தேவன்' கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 2ம் பாகத்தில் கார்த்தி-த்ரிஷா இவர்களின் காட்சிகள் குறைவாக இடம்பெற்றிருந்தாலும், வந்தியத்தேவன்-குந்தவை ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அந்த வகையில், ஜப்பானிலும் வந்தியத்தேவன் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதோடு, அந்த ரசிகர்கள் சென்னைக்கு வந்து ரசிகர்களோடு ரசிகர்களாக பல முறை 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தைப் பார்த்த சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க செய்துள்ளது.

இச்சம்பவத்தை அறிந்த கார்த்தியும், உடனே ஜப்பான் ரசிகர்களை பார்க்கும் ஆவலுடன், அவர்களை வீட்டுக்கு அழைத்து நன்றி தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர்களுடன் மனம்விட்டுப் பேசி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார். ஜப்பான் ரசிகர்களும், தாங்கள் கொண்டுவந்த பரிசுப் பொருட்களை கார்த்திக்கு கொடுத்தனர்.

இதுவரை ரஜினிக்கே ஜப்பானில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது 'வந்தியத்தேவன்' கார்த்திக்கு இப்படிப்பட்ட தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தற்போது ஜப்பான் ரசிகர்களுடன் கார்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com