அப்பத்தாவை கொல்ல சதித்திட்டம்.. அடுத்து என்ன ஆகும்? எதிர்பார்ப்பை கிளறும் எதிர்நீச்சல்!
சொத்து பிரச்சனை தீவிரமெடுத்து வரும் நிலையில், குணசேகரன் அப்பத்தாவை கொல்லுவதற்கு திட்டம் தீட்டியுள்ளார்.
2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார்.
கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் - தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.
அப்பத்தா பட்டம்மாளின் 40% சொத்துக்களை ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டார். இது குணசேகரனுக்கும் அவரது குடும்பத்துக்கும் பேரிடியாய் விழுந்தது. இதையடுத்து ஜீவானந்தம் யார்? அவருக்கும் அப்பத்தாவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி குணசேகரன் குடும்பத்தைப் போலவே பார்வையாளர்களையும் துளைத்தெடுத்தது.
இந்நிலையில் இன்றைய எபிசோடில், ”அப்பத்தாவை போட்டு தள்ளியே ஆக வேண்டும்” என கதிர் சொல்ல, அதற்கு, ”கல்யாணம் முடிக்கப் போறது மாதிரி சொல்ற, கிழவியை முடிக்கணும்பா, சாதாரண விஷயம் இல்ல அது” என்கிறார். மறுபக்கம் மருமகள்கள், அப்பத்தா பட்டம்மாள், குழந்தைகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது தர்ஷினி, இந்த 40% ஷேர், மறுமகள்களுக்கு தானே என்கிறார். ஆனால் அதற்கு, “நான் அவர்களுக்கு கொடுக்க போவதாக யார் சொன்னார்கள்?” என்கிறார் அப்பத்தா. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.