எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரியின் கடந்தகாலம் குறித்து குணசேகரனுக்கு தெரிய வந்துள்ளது.
2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார்.
கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் - தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.
அப்பத்தா பட்டம்மாளின் 40% சொத்துக்களை ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டார். இது குணசேகரனுக்கும் அவரது குடும்பத்துக்கும் பேரிடியாய் விழுந்தது. இதையடுத்து ஜீவானந்தம் யார்? அவருக்கும் அப்பத்தாவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி குணசேகரன் குடும்பத்தைப் போலவே பார்வையாளர்களையும் துளைத்தெடுத்தது.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டுக்கு வருகிறார் ஈஸ்வரியின் அப்பா. பின்னர் குணசேகரன் உள்ளிட்ட குடும்பத்தாரிடம், ”ஈஸ்வரியை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக் குடுங்கன்னு கேட்டான், அந்தப் பய தான் ஜீவானந்தம்” என உண்மையைப் போட்டு உடைக்கிறார். இதைக் கேட்ட குணசேகரன் அதிர்ச்சியில் நிலைகுலைந்து வாசலில் அமர்கிறார். அடுத்து என்ன நடக்க போகிறது என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த ப்ரோமோ காட்சிகள் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.