100 நாட்களுக்குப் பின் மகள் வந்தாள்; நடிகை பிரியங்கா சோப்ரா!

100 நாட்களுக்குப் பின் மகள் வந்தாள்; நடிகை பிரியங்கா சோப்ரா!

பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் கோலோச்சும் நடிகை பிரியங்கா சோப்ரா, வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த தனது குழந்தையின் படத்தை முதன்முதலாக பகிர்ந்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனசும் கடந்த 5 வருடங்களுக்கு முன் இந்தியப் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம், வாடகைத் தாய் மூலம் தாங்கள் பெண் குழந்தை பெற்றெடுத்ததை அறிவித்தனர். 

கலிபோர்னியாவின் சான் டியாகோவில் ஜனவரி 15-ம் தேதி இரவு 8 மணியளவில் குழந்தை பிறந்ததாக தகவல்கள் தெரிய வந்தன. அக்குழந்தைக்கு மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என்று பெயரிடப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.  

பிரியங்கா நிக் தம்பதியினர் தங்கள் குழந்தை பிறந்ததை ஆறு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 21 அன்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர். அதில்  "வாடகைத் தாய் மூலம் எங்கள் குழந்தை பூமிக்கு வந்துள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில் நாங்கள் ப்ரைவசியை எதிர்பார்க்கிறோம். மிக்க நன்றி" என்று அறிவித்தனர்.

பிரியங்காவின் குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள மால்தி மேரி சோப்ரா ஜோனாஸ் என்ற பெயர் பிரியங்கா மற்றும் நிக்கின் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தான் தாயாக ஆன அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். "என் குழந்தையை சுதந்திரமாக வளர்க்க விரும்புகிறேன். என்னுடைய ஆசைகள், கனவுகள், வளர்ப்பு முறை ஆகியவற்றை என் குழந்தை மீது திணிக்க மாட்டேன். அவளது விருப்பங்களை நான்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை." என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் ( மே 8) அன்னையர் தினத்தை முன்னிட்டு தங்கள் மகள் மால்தியின் முதல் படத்தை பிரியங்காவும் அவரது கணவர் நிக் ஜோனசும் பகிர்ந்துள்ளனர்.

''கடந்த 100 நாட்கள் NICU-வில் (நியோனாடல் இன்டென்சிவ் கேர் யூனிட்) இருந்த பிறகு, ஒருவழியாக எங்கள் செல்ல மகள் வீட்டுக்கு வந்து விட்டாள்'' என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர். 

பிரியங்கா சோப்ரா தன் குழந்தை  மால்தி மேரியை மார்போடு அணைத்திருக்க, அருகில் நிக் நிற்கிறார். ஆனாலும் குழந்தையின் முகத்தை முழுவதும் காட்டாமல் இருதயம் எமோஜி படம் மூலம் மறைத்துள்ளனர். தற்போது அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com