55வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் தில்லானா மோகனாம்பாள்!   

55வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் தில்லானா மோகனாம்பாள்!  

ல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சிறந்த  சினிமாக்களைப் பற்றி பேசுவதும் கொண்டாடுவதும் மகிழ்ச்சியான விஷயம். இது போல 55 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இன்று வரை தமிழர்களால் கொண்டாட்டப்படும் படமாக இருக்கிறது தில்லானா மோகனாம்பாள் திரைப்படம்.

1968 ம் ஆண்டு ஜூலை 27 அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது இப்படம்.  எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் ஒரு பிரபல வார இதழில் தொடராக எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற தொடர் கதையை திரைப்படமாக எடுத்தார் ஏ. பி. நாகராஜன் அவர்கள். கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுத்துக்களில் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கு சிறிது  மெருகேற்றி திரையில் நடிக்க வைத்தார் இயக்குநர்.   

ஒரு நாதஸ்வர கலைஞனுக்கும், பரத நாட்டியம் ஆடும் பெண்ணிற்கும் இடையே ஏற்படும் ஈகோவை மைய்யப்படுத்தியே இப்படம் நகரும். ஈகோவுடன் சேர்ந்து மெல்லிய காதலும் இவர்களுக்குள் மலரும்.சிக்கல் சண்முக சுந்தரமாக  சிவாஜியும், மோகனாம்பாளாக  நாட்டியப்பேரொளி பத்மினி அவர்களும் படத்தில் நடித்தாங்ர்கள் என்பதைவுட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள் என்று சொல்வது கூட  மிகக் குறைவான வார்த்தைதான்.

இருவரும் நடிப்பில் அற்புதமான திரை கெமிஸ்ட்ரியை தந்திருப்பார்கள்.சிவாஜி அவர்கள் நடித்த சிறந்த படங்கள் என்று பட்டியல் லி ட்டால் தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு மிக சிறந்த இடம் உண்டு. கே. வி.மஹாதேவன் இசையில் நலந்தானா? மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? பாடல்கள் ஒலிக்காத இல்லங்களே தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லாம். ஜில் ஜில் ரமாமணியாக மனோரமா ஆச்சியும், அப்பாவித்தனமான முகத்தை வைத்து பாலையா அவர்கள் செய்யும் குறும்பும்  என நகைச்சுவை விருந்தே படத்தில் இருக்கும்.

படத்தின் வெற்றிக்கு காரணம் நடிப்பா, பத்மினியின் நடனமா? நகைச்சுவையா? இசையா? பாடல் வரிகளா?  என தமிழ் ரசிகர்கள் இன்று வரை தில்லானா மோகனாம்பாள் படத்தை வைத்து பட்டி மன்றமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் தனது கதையில் மோகனாம்பாளை  பதினாறு வயது இளம் பெண்ணாக உருவாக்கி இருப்பார். ஆனால் இப்படம் நடிக்கும் போது பத்மினி அவர்களுக்கு முப்பத்தியாறு வயது. படத்தில் பத்மினிக்காக சில மாற்றங்களை செய்து மோகனாம்பாள்  கேரக்டரை உருவாக்கினார். பத்மினி அவர்களும் மிகப்பெரிய பங்களிப்பை தந்திருப்பார்.

இப்படத்தில் நாதஸ்வரயிசைக்கு பின்னணி இசை தந்தவர்கள் நாதஸ்வர இரட்டையர்கள் மதுரை சேதுராமன் மற்றும் பொன்னுசாமி ஆவார்கள். இப்படம் வெளியான பின்பு இவர்கள் இருவரும்  சென்ற கச்சேரிகள் பலவற்றில் ரசிகர்கள்  இவர்களிடம் தில்லான மோகனாம்பாள் படத்தில் சிவாஜி வாசிப்பது போல வாசியுங்க என்று ரசிகர்கள் அன்பு தொல்லை தந்திருக்கிறார்கள். "படத்தில் சிவாஜி வாசிக்கவில்லை, நாங்கள் இருவரும்தான் வாசித்தோம், சிவாஜி வாசிப்பது போல நடித்தார் என்று இவர்கள் சொல்லியும் நம்பவில்லை பலர். இதை இந்த இசை இரட்டையர்கள் பல இடங்களில் சொல்லியிரு க் கிறார்கள்.

சிவாஜியின் நடிப்பு மிக தத்ரூபமாக இருந்ததே இதற்குக் காரணம். இப்படம் வெளியான பின்பு பல முறை ரீ -ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கரகாட்டக்காரன் திரைப்படம் உருவாக  தில்லானா  மோகனாம்பாள் படத்தின்  பாதிப்புதான் காரணம் என்பதை கரகாட்டாக்காரன் இயக்குநர் கங்கை அமரன் பதிவு செய்துள்ளார். 1969ஆம் ஆண்டு மிக சிறந்த படத்திற்க்கான தேசிய விருது தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு கிடைத்தது.2010 ஆம் ஆண்டில் ரஷ்ய திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. 

படம் வெளியாகி 55 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட ரசிகர்களால் வீட்டிலும், பொது இடங்களில் மகிழ்ச்சியுடன் பேசும் படமாக தில்லானா மோகனாம்பாள் இருக்கிறது.        மிக சிறந்த வணிகப் படமாகவும், இசை கலைஞர்களுக்கு கெளரவமும் சேர்த்த தில்லானா மோகனாம்பாள் படம் செல்லுலாய்ட் பொக்கிஷம் என்றே சொல்லலாம்.                                               

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com