ஹாலிவுட்டில் கலக்க இருக்கும் பிரபல தமிழ்ப்பட வில்லன்!
தமிழில் 'முதல்வன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சம்பத் ராம். அதைத் தொடர்ந்து 'வல்லரசு', 'தீனா', 'தவசி', 'ரமணா', 'போக்கிரி', 'மதராசப்பட்டினம்', 'என்னை அறிந்தால்', 'மாரி', 'விக்ரம்' என தற்போது வரை பிரபல வில்லன் நடிகராக வலம் வருகிறார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
பல மொழிகளில் நடித்துள்ள அவரது வில்லத்தன நடிப்பு ரசிக்கப்பட்டாலும், ஒருசில படங்களில் மட்டுமே மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மலையாளத்தில் நடித்து வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 'மாளிகப்புரம்' அவரது கேரியலில் திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். இப்படத்தில் அவர் முதன்மை வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றார்.

இந்நிலையில், அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை', பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்', 'கட்டில்' உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல முன்னணி நாயகர்களின் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, '25 வருட நடிப்பின் பலனாக 'மாளிகப்புரம்' பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், தற்போது தனக்கு ஹாலிவுட் படங்களான 'தி கிரேட் எஸ்கேப்', 'தி பேர்ல் பிளட்' ஆகிய படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.