'தசரா', 'புஷ்பா' ஒப்பீடு செய்த ரசிகர்! ட்வீட்டுக்கு விளக்கமளித்த நானி!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் 2008ல் 'அஷ்ட சம்மா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமாகி 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'வெப்பம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில தமிழ்ப்படங்களில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் தற்போது, 'தசரா' திரைப்படம் உருவாகி மார்ச் 30ம் தேதி திரைக்கு வரத் தயாராகியிருக்கிறது. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடெல்லா என்பவர் எழுதி இயக்கியுள்ளார். இது இவரது முதல் படமாகும்.
மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இப்படத்தின் டிரைலர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

'தசரா' படத்தின் டிரைலர் காட்சிகளைப் பார்க்கும்போது, 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூன் பனியன் சட்டை அணிந்தபடி ரவுடி போல் தோற்றமளிப்பதைப் போன்று, இப்படத்தில் நானி பனியன் சட்டையுடன் அதிரடி செய்திருக்கிறார்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் ' 'தசரா' படம் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்' போன்று இருக்கிறதே... எப்படி இந்த படங்களிலிருந்து வேறுபடுகிறது' என்பது போன்று ட்விட்டரில் கேட்டுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த நானி, அர்னால்ட் மற்றும் ஷாருக்கான் லெதர் ஜாக்கெட் அணிந்து நடித்தும், அவர்களது படமான 'டெர்மினேட்டர்' மற்றும் 'தில்வாலே துல்ஹனியா லி ஜாயிங்கே' எப்படி வேறுவேறு படமாக பார்க்கப்பட்டதோ அப்படித்தான் என்று நானி அவருக்கு ரி-ட்வீட் செய்துள்ளார்.