தமிழ்த் திரையுலகில் புது முயற்சி - ’ஸ்க்ரிப்டிக்’ திரைக்கதை வங்கி!

தமிழ்த் திரையுலகில் புது முயற்சி - ’ஸ்க்ரிப்டிக்’ திரைக்கதை வங்கி!

திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’  தொடங்கியுள்ள மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன்.

திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர் புதிய முயற்சி தான் ‘ஸ்கிரிப்டிக்’. (SCRIPTick).

மதன் கார்க்கி மற்றும் தயாரிப்பாளர் கோ.தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து இந்தியாவிலேயே முதன்முறையாக, ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) என்ற பெயரில் திரைக்கதை வங்கியைத் தொடங்கியுள்ளனர்.

“ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி மற்றும் www.scriptick.in என்ற அதன் இணையதளத்தை மூத்த திரைப்பட இயக்குநர், பாரதிராஜா இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

திறமையான எழுத்தாளர்களிடமிருந்து கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, முழுமையாக உருவாக்கப்பட்ட, நேர்த்தியான திரைக்கதைகளை, தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களுக்கு வழங்க உருவாக்கப்பட்டதுதான் ஸ்கிரிப்டிக்.

தற்போது உருவாகும் பெரும்பாலான திரைப்படங்களின் திரைக்கதைகள் அனுபவம் வாய்ந்த திரைக்கதை எழுத்தாளர்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாகத் தோல்வி அடையும் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவதை  நாம் பார்க்கிறோம். ஸ்கிரிப்டிக் வழங்கும் திரைக்கதைகளின் தரம், அனுபவம் வாய்ந்த திரைக்கதை எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவால் உறுதி செய்யப்படுகிறது. எனவே, ஸ்கிரிப்டிக்-லிருந்து பெறப்பட்ட திரைக்கதைகள், திரைப்படங்களாக உருவாக்கப்படும்போது பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறும் என்பதைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நம்பலாம்.

திரைக்கதை எழுத்தாளர்கள் பலரை உருவாக்குவதும், அவர்களின் பணிக்கு உரிய ஊதியம் வழங்குவதும் ஸ்கிரிப்டிக்-ன் இலக்காகும். திரைப்படங்களுக்கான கதைகள் எழுதும் தொழிலைத் தேர்ந்தெடுக்க, அதிக எண்ணிக்கையிலான திரைக்கதை எழுத்தாளர்கள் உருவாக இந்த முன்முயற்சி ஊக்குவிக்கும் என்கிறார்கள்.

புள்ளி விவரம் ஒன்றை சமீபத்தில் பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர் திரு.எஸ்.ஆர். பிரபு (ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்), 2022 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தாங்கள் பெற்ற கதைச் சுருக்கங்களின் எண்ணிக்கை குறித்தும் அவற்றில் எத்தனை அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன என்பது பற்றியும் தெரிவித்திருந்தார். அதன்படி, மேற்கண்ட காலகட்டத்தில் அவரது குழு பல்வேறு வகைகளில் 814 கதைச் சுருக்கங்களைப் பெற்ற போதிலும், அவைகளிலிருந்து வெறும் 43 (5% மட்டுமே) கதைச் சுருக்கங்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்குத் தகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஒவ்வொரு தயாரிப்பாளரும் இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட திரைக்கதைகளைப் படித்து, ஒரு சில திரைக்கதைகளைத் தேர்ந்தெடுக்காமல், ஒரு வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கதைகளை மட்டுமே படித்தால், அவர்களின் நேரமும், செலவும் மிச்சமாகும். குறைவான நேரத்தில், பல திரைப்படங்களை அவர்களால் உருவாக்க முடியும்.

இந்த நோக்கில்தான் ஸ்கிரிப்டிக் திரைக்கதை வங்கி தொடங்கப்படுகிறது.  திறமையான திரைக்கதை எழுத்தாளர்களிடமிருந்து கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முழுமையாக உருவாக்கப்பட்டு, படப்பிடிப்பிற்கு செல்ல தயாரான நிலையில் உள்ள நேர்த்தியான திரைக்கதைகளை ஸ்கிரிப்டிக் நிபுணர் குழு தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும். மதன் கார்க்கி, கோ. தனஞ்ஜெயன் ஆகியோருடன் திரைக்கதை வல்லுநர்  ‘கருந்தேள்’  ராஜேஷ் தலைமையில் அமைந்துள்ள இந்தக் குழுவில், திரைப்பட இயக்குனர், கதாசிரியர் மற்றும் திரைக்கதை நிபுணர்கள்கள் உள்ளனர்.  

இது தவிர, ஸ்கிரிப்டிக் குழு திரைக்கதை குறித்த ஆலோசனை (Script Consulting), செப்பனிடுதல் (Script Doctoring), முறைப்படுத்துதல், திரைக்கதை மதிப்பீடு (Script Rating Certificate) உள்ளிட்ட இதர பல சேவைகளையும் வழங்கும் என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திரைக்கதை வங்கியை பாரதிராஜா துவக்கிவைத்தார்.

logo
Kalki Online
kalkionline.com