சென்னை பனையூரில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் "மறக்குமா நெஞ்சம்" என்ற தலைப்பில் கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற இருந்த ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி, மழையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களுக்கு மட்டுமின்றி அவரின் கான்செட்டுகளுக்கும் இவ்வளவு Hard Core ரசிகர்கள் உள்ளனர் என்பதையும் இதை காண நாடு கடந்து கூட பறந்து வருகிறார்கள் என்பதையும் ஒரு நாள் பெய்த அடைமழை நிரூபித்து உள்ளது. எப்போ, எப்போ என ரசிகர்களை நீண்ட நாட்களாக காக்க வைத்த மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இசை நிகழ்ச்சியையொட்டி கிழக்கு கடற்கரை சாலை வழியாக தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சென்னை பெருநகர காவல் துறை தரப்பில் முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், கச்சேரியை காண சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தவர்கள் பனையூர் நோக்கிப் படையெடுத்தனர்.
ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் நேற்று மாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசை கட்டி நின்றன. இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் இசை கச்சேரியை காண வந்தவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இசை கச்சேரியை காண ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய், 5000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என அமர்வதற்கு ஏற்றார் போல் கோல்டன், சில்வர், பிளாட்டினம் என இருக்கைகளை வகைப்படுத்தி கட்டணம் வசூலித்ததாகவும், ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கைகளை திட்டமிட்டபடி ஒதுக்கீடு செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏ.ஆர். ரகுமான் இசை கச்சேரியை காண வந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளான நிலையில், இது தொடர்பாக பலர் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இணையத்தில் மறக்காது நெஞ்சம் என ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்பான சென்னை மக்களே, நேற்று நடந்த இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட்டை வாங்கிவிட்டு சில துரதிருஷ்டவசமாக கலந்து கொள்ளாமல் திரும்பி சென்றவர்கள் டிக்கெட் நகலை அனுப்புங்கள். தங்களது டிக்கெட் நகலை உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள். எங்கள் குழுவினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.