-ராகவ் குமார்.
சமீபத்தில் வெளியான படங்களில் கருணாஸ், அருண்பாண்டியன் நடித்த ஆதார் திரைப்படம் பல்வேறு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் நமது இந்திய சமூகத்தின் அதிகார வர்க்கத்தின் மனசாட்சியை கேள்விக்குள்ளாக்குகிறது.
இப்படத்தின் இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் படங்களை இயக்கியவர்.ஆதார் திரைப்படம் ஐரோப்பியா, கொல்கத்தா உட்பட பல்வேறு இடங்களில் நடந்த திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது.

இனி டைரக்டரிடம் சில கேள்விகள் :
1. அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் இந்த ஒன் லைனுக்கு கரு எது?
குறிப்பிட்டு சொல்ல முடியாது. நம் செய்தித்தாள்களில், பிறர் சொல்லி கேட்ட விஷயங்களை உள்வாங்கி ஒரு திரைக்கதை அமைத்தேன்.
2. உங்களை போன்ற இளம் இயக்குனர்கள் காவல் துறையினரை விமர்சிப்பது போன்று படம் எடுக்கிறீர்களே? ட்ரெண்டா? பேஷனா?
இந்த கேள்வியே தவறானது. இந்த படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு காவல் துறை பெண் அதிகாரி, புகார் கொடுக்க வந்த நபரின் குழந்தைக்கு தாய்ப்பால் தருவது போல் காட்டியிருப்பேன். இதை விட காவல் துறையினரை எவ்வாறு பெருமை படுத்த முடியும். காவல் துறையினரும் இந்த வணிக அரசியல் சக்கரத்தில் சுழல்பவர்களே என சொல்லியிருக்கிறேன்.

3.கருணாஸ், அருண்பாண்டியன் என அரசியல் பின் புலம் கொண்டவர்களை உங்கள் படத்தில் நடிக்க வைத்தது, படத்திற்கு பிரச்சனை வரக்கூடாது என்ற காரணத்தினாலா?
இல்லை. கருணாஸ், திண்டுக்கல் சாரதி படம் முதல் எனக்கு அறிமுகம் ஆனவர். இந்த கதைக்கு பொருத்தம் என தோன்றியது. மேலும் இந்த கதையை ஒரு பெரிய ஹீரோவிடம் சொல்ல முடியாது. ஏட்டையா கதாபாத்திரம் வடிவமைக்கும் போது அருண் பாண்டியன் மனதில் வந்து விட்டார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடிக்கிறேன் என முன் வந்த இனியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
4.பொதுவாக இயக்குனர்கள் யதார்த்தமான படத்தில் இருந்து கமர்சியல் படங்களுக்கு செல்வார்கள். ஆனால் நீங்கள் கமர்சியலில் இருந்து யதார்த்தம் நோக்கி நகர்ந்து விட்டீர்களே?
மக்கள் யதார்த்தத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது எதோ ஒரு படம் எடுத்தோம் என இருக்க முடியாது. வாழ்க்கையின் பிரதிபலிப்பு திரையில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இயக்குனர் மஹேந்திரன் சொன்னது போல் "உணர்வுகளின் பிரம்மாண்டாம்" என்பதை திரையில் தேட ஆரம்பித்து விட்டார்கள்.

5. கட்டிட தொழிலாளியை கதையின் நாயகனாக காட்ட வேண்டிய அவசியம் என்ன?
நாம் அனைவரும் சந்தித்து கடந்த ஒரு பெயர் கொத்தனார். இந்த கொத்தனார் எனும் கட்டிட தொழிலாளியை மையமாக வைத்தால் கதையுடன் நாம் இணைத்து கொள்ள முடியும்.
6. ஒரு நல்ல போலீஸ்காரர் காதாபாத்திரம் இஸ்லாமியராக இருப்பது ஏன்?
சிறுபான்மையினர் மீது இன்னமும் நல்ல அபிப்ராயம் வர வேண்டும் என்பது தான் காரணம். நமது மனசாட்சியின் குரலாக இஸ்லாமிய கதாபத்திரத்தை உருவாக்கி உள்ளேன்.
7. உங்களின் அடுத்த படம் எப்படி இருக்கும்?
மக்களின் பிரச்சனைகளை சொல்லும் யதார்த்தமான படமாக இருக்கும்.