அன்றே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய அதிரடி நடிகை!

ஜூலை 31 - மும்தாஜ் மத்வாணி பிறந்த தினம்!
அன்றே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய அதிரடி நடிகை!

ங்கள் அழகாலும் திறமையான நடிப்பாலும் இந்திய திரையுலகில் நம்மை வசீகரித்தவர்கள் வரிசையில் வருகிறார் இவர். பிரபல இந்திய நடிகரும் மல்யுத்த வீரருமான தாரா சிங்கால் அதிரடி இளவரசி என்று பாராட்டப்பட்டவர். 1947 ஜூலை 31 இல் பிறந்த மும்தாஜ் மத்வாணி  (Mumtaz Madhvani) ஈரானில் புகழ் பெற்ற உலர் பழங்கள் விற்பனையாளரான அப்துல் சலீம் அஸ்காரி மற்றும் ஷாதி ஹபீப் ஆகா ஆகியோரின் மகள். 1958ல் வெளிவந்த  ‘சோனெ கி சித்தியா’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு பயணத்தைத் துவங்கினார்.

    கலகலவென்று சிரிக்கும் அந்த அப்பாவி புன்னகை,  சட்டென்று அகல விரியும் கண்கள், என்றும் பதினெட்டு வயது இளமையைத் தக்க வைக்கும் அழகு முகம் என்பதெல்லாம் இவருக்கே ஆன சில அடையாளங்கள்.  ‘வல்லா கியா பாட் ஹை’, ‘ஸ்ட்ரீ’ (1961) மற்றும் ‘செஹ்ரா’ போன்ற படங்களில் 60களின் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கி, பின்னர் ஓ. பி. ரத்தன் இயக்கத்தில் வெளிவந்த ‘கெஹ்ரா தாக்’ என்ற திரைப்படத்தில் நாயகனுக்கு தங்கை வேடத்தில் தோன்றினார். ‘முஜே ஜீனே தோ’ படத்திலும் சிறு வேடம்தான்.

  அவரை மற்றவர்கள் கவனிக்க வைக்கும்படி அமைந்து நட்சத்திரம் ஆக்கிய படம் அப்போதைய பிரபலமான ராஜேஷ்கண்ணாவின்  இணையாக (Do Raaste) ‘தோ ராஸ்தே’ (1969) படத்தில் ஏற்ற துணை வேடம்தான். இயக்குனர் ராஜ் கோஸ்லா (Raj Khosla) அவருக்காக நான்கு பாடல்களைப் படமாக்கியது அவருக்கான முக்கியத்துவத்தை அளித்தது. இந்த படம் பிரபலமானதால் மும்தாஜும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். ராஜேஷ் கன்னாவுடன் நடித்த ‘பந்தன்’ 65 மில்லியனுக்கும் மேல் சம்பாதித்து.

    1971 இல் வெளிவந்த ‘கிலோனா’ என்ற திரைப்படத்திற்கு இந்தியத் திரையின் உயர் விருதான பிலிம்பேர் அவார்டைப் பெற்றுள்ளார். இவர் புகழ் பெற்ற நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் பெரும்பாலான படங்களில் பணிபுரிந்துள்ளார். 60 மற்றும் 70 ஆம் ஆண்டு களின் சிறந்த நடனக் கலைஞர் மற்றும் அழகு ராணியாக திகழ்ந்தவர் நடிகை மும்தாஜ்.

தாரா சிங் மற்றும் மும்தாஜ் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த படங்களில் தாராசிங்கின் சம்பளம் 4.50 லட்சமும்,  மும்தாஜ் சம்பளம்  2.50 லட்சமும் ஆகும். அப்போதெல்லாம் நடிகைகளின் சம்பளம் ஹீரோக்களுக்கு தருவதை விட மிகக்குறைந்த அளவே இருக்கும். ஆனால் அந்த நாளில் ஹீரோவின் சம்பளத்தில் பாதிக்கும் மேல் மும்தாஜ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ‘தங்கேவாலா’ என்ற படத்தில் ராஜேந்திர குமாருடன் கதாநாயகியாக முன்னணி பாத்திரத்தில் நடித்தார்.  அவர் அதிரடி-திரைப்பட கதாநாயகியாக இருந்ததனால் ‘சாச்சா ஜோதி’ படத்தில் சசி கபூருடன் நடிக்க மறுத்துவிட்டார். ‘ஷோர் மச்சையா சோர்’ (1973), லோஃபர் மற்றும் ஜீல் கே உஸ் பார்’ (1973) போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக தர்மேந்த்ராவுடன் நடித்தார்.

பிரபலமான நடிகையாக இருந்தபோதே தன் குடும்பத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக திரையுலகில் இருந்து விலக நினைத்து 1977ல் ஆய்னா எனும் படத்திற்குப் பின் நடிப்பதைத் தவிர்த்தார். மீண்டும் 1990களில் ‘ஆந்தியான்’ எனும் படத்திற்காக 13 ஆண்டுகளுக்குப்பின் நடிக்க வந்தார். அதுவே அவரது கடைசிப் படமும் ஆயிற்று. அதற்குப்பின் நடிப்புலகை விட்டு ஒதுங்கி வாழும் மும்தாஜ் தற்போது 75  வயதைத் தொடுகிறார் .

    “ஒரு காரியத்தை செய்ய விடாமல் எத்தனையோ தடைகள் நெருக்கடிகள் ஏமாற்றங்கள் வரலாம். ஆனால், அவை உங்கள் உற்சாகத்தையும் முயற்சியையும் குலைத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உறுதியைக் கண்டு ஒரு கட்டத்தில் அவை அனைத்தும் தோற்று ஓடிவிடும்.”  இது மும்தாஜின் மொழி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com