நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் காலமானார் - மின்னஞ்சலுக்கு இரங்கல் செய்தி அனுப்பலாம்!
நடிகர் அஜித்குமாரின் தந்தை வெள்ளிக்கிழமை காலை வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடல் இன்று காலை 10 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
திரு. சுப்ரமணியத்திற்கு மோகினி என்ற மனைவியும், அனுப்குமார், அஜித்குமார், அனில் குமார் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.
நடிகரின் மேலாளர் சுரேஷ் சந்திரா இந்த அதிகாரப்பூர்வ செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியின் சாராம்சம் இது;
“எங்களது தந்தை இன்று அதிகாலையில் மறைந்தார். வயோதிகம் காரணமான நீண்டகால உடல்நலக் குறைபாட்டால் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 85.
4 ஆண்டுகளுக்கு முன்பு மிக மோசமான ஸ்ட்ரோக் வந்ததிலிருந்து அவரை மிகக் கவனமாகப் பாதுகாத்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவருக்கும் நாங்களும் எங்களது குடும்பத்தினரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
எங்கள் தந்தையார், கடந்த 60 வருடங்களாக மிக அன்பான எங்கள் தாயார் மோகினி அவர்களுடன் மிக நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
தந்தை மறைவை ஒட்டி எங்களுக்கு ஆறுதல் மொழிகள் கூறி அலைபேசி வழியாக இரங்கல் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. உங்கள் அன்புக்கு நன்றி. குறிப்பிடத்தக்க கால அளவில் அவற்றுக்கு மறுமொழி அளிக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
தந்தையாரின் இறுதிச் சடங்கு குடும்ப நிகழ்வாக மட்டுமே அனுசரிக்கப்பட இருப்பதால் மறைவுச் செய்தியை அறிந்து கொள்ள நேரும் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதை ஒரு எங்களது தனி நிகழ்வாக அனுசரிக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார்
இரங்கல் செய்திகளை psmanifamily@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.”
என்று தெரிவிக்கிறது அந்த மறைவுச் செய்தி.