சமூக வலைதளங்களில் வரும் கமெண்டுகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக நடிகர் அசோக் செல்வன் பேரழிகியுடன் நான் என பதிவிட்டுள்ளார்.
சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். சோலோ ஹீரோவாக தெகிடி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. பின்னர் ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், பிசாசு, மன்மத லீலை, நித்தம் ஒரு வானம் என அடுத்தடுத்து அவரது பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.சமீபத்தில் வெளியான போர்த்தொழில் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாகவே அமைந்தது என சொல்லலாம்.
இந்த நிலையில், நடிகர் அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த வாரம் திருநெல்வேலியில் ஜோராக இருவருக்கும் திருமணம் முடிந்தது.
நடிகர் அருண் பாண்டியன் இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இன்றும் அவரது சில படங்கள் 80ஸ் கிட்ஸின் ஃபேவரிட்டாகும்.இவரது மகள்தான் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்தார். இவரும் நடிகர் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் திருமண புகைப்படங்களை பார்த்த பலரும் கீர்த்தி பாண்டியனை கேலி செய்யும் விதமாக கமெண்டுகளை தட்டி வந்தனர். அசோக் செல்வனுக்கு இப்படி ஒரு பொன்னா என்றெல்லாம் பேசி வந்தனர். இவர்களின் வாயை அடைக்கும் விதமாக நடிகர் அசோக் செல்வன் இன்று இருவரும் எடுத்த போட்டோவை பகிர்ந்து பேரழிகியுடன் நான் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.