
நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் மதுரையில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
தமிழ் திரை உலகின் உச்சபட்ச நகைச்சுவை நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த சில வருடங்களாக திரை துறையை விட்டு விலகி இருந்தார். அவ்வப்போது நடிகர் வடிவேலு நடிப்பில் ஒரு சில படங்கள் வெளியான பொழுதும் அந்த படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பு பெற்று தரவில்லை.
இந்த நிலையில் தற்போது வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் நடிப்பு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கப்பட்டது. மேலும் நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு குணச்சித்திர வேடத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டுக்காக வடிவேலு காத்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் மதுரையில் இன்று தனது இல்லத்தில் உயிரிழந்தார். நடிகர் வடிவேலுவிற்கு மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள் உள்ளனர். வடிவேலு தான் தனது குடும்பத்தை கவனித்து கொள்கிறார் என்று வடிவேலுவின் சகோதரர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் மதுரை விரகனூரில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை உயிரிழந்தார். அவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இறுதி ஊர்வலம் இன்றோ அல்லது நாளையோ மதுரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜெகதீஸ்வரன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தார். மதுரையில் சொந்தமாக ஜவுளி வியாபாரம் செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.