நடிகர் விஜயகாந்தின் திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரை!
தமிழ்நாட்டின் முன்னணி நடிகர், தென் இந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், கேப்டன் என்று பல்வேறு அடையாளங்களைக் கொண்ட விஜயகாந்தின் 71வது பிறந்தநாளில் அவருடைய வாழ்க்கை குறிப்புகளை பார்ப்போம்.
தமிழ் திரையில் நடிகர் ரஜினிகாந்தும், கமலஹாசனும் ஆதிக்கம் செலுத்திய காலம் அது. அப்போது மதுரையில் அரிசி ஆலை நடத்தி வரும் சாதாரண குடும்பப் பின்னணியை கொண்ட விஜயராஜ், நடிப்பு மீது ஆர்வம் கொண்டு தனது குடும்பத்திடம் விருப்பத்தை தெரிவிக்கிறார். ஆனால் குடும்ப மறுப்பு தெரிவிக்க தந்தையின் அரிசி ஆலை விட்டு வெளியேறி சென்னைக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் விஜயராஜ் தனது பயணத்தை மேற்கொள்கிறார்.
விஜயராஜ் விஜயகாந்தாக மாறினார்
1978 ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையை தொடங்கிய விஜயராஜ், தனது எதார்த்தமான நடிப்பால் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் பெறத் தொடங்கினார். அப்போது முன்னணி நடிகராக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த ரஜினிகாந்துக்கு போட்டியாக விஜயராஜ், விஜயகாந்தாக மாற்றப்பட்டார். பிறகு தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்ற கிளைகள் தொடங்கும் அளவிற்கு பிரபலமடைந்தார்.
விஜயகாந்தின் நடிப்பு அவரை தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க காரணமாக இருந்தது. அதேநேரம் விஜயகாந்த் அன்போடு பழகும் விதம் திரைத்துறையினர் மத்தியில் விஜயகாந்த் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்தியது. குறிப்பாக விஜயகாந்த் படப்பிடிப்புகளில் யாரும் உணவு சாப்பிடாமல் இருந்தது கிடையாது என்று சொல்லும் அளவிற்கு உணவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தார். அவர் அனைவரையும் அரவணைக்கும் வீதம் விஜயகாந்த் மேலும் வளர்ச்சிக்கு அழைத்து சென்றது.
இப்படி விஜயகாந்தினுடைய எளிமையான குணம் அவரை தென்னிந்திய நடிகர் சங்கத்தினுடைய தலைவராக உயர்த்தியது. மேலும் 1991 ஆம் ஆண்டு கேப்டன் என்று அடைமொழியும் வழங்கப்பட்டது. விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த பொழுது அவர் செயல்பட்ட விதம் திரைத்துறையினரை மட்டுமல்லாமல் பல தரப்பினரால் பாராட்ட பெற்றது.
தேமுதிகா உதயம்
மேலும் அந்த காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போகிறார் என்று பெரிதும் பேசப்பட்ட நிலையில் அமைதியாக இருந்த விஜயகாந்த் அடுத்த சில வருடங்களில் அரசியலுக்கான தனது பணிகளை தொடங்கினர். தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக பெயரை மாற்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சமூக நல பணிகளை முன்னெடுக்க தொடங்கினார். குறிப்பாக தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் எம்ஜிஆர் பெயருக்கு அடுத்து அதிகம் பேசப்பட்ட நடிகரின் பெயராக விஜயகாந்தின் பெயர் மாறியது.
இந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை உள்ளாட்சி தேர்தலில் களம் இறக்கினார். தமிழ்நாடு முழுவதும் போட்டியிட்ட விஜயகாந்தின் ரசிகர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றனர். அதோடு அதிகளவிலான வாக்குகளையும் பெற்றனர். இது தமிழ்நாடு அரசியலில் விஜயகாந்த் மீதான பார்வையை அதிகரிக்கச் செய்தது.
அதை தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அன்று விஜயகாந்திற்கு ஆதரவாக அதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த பன்ருட்டி ராமச்சந்திரனும் தேமுதிக இணைந்தார். திமுக, அதிமுகவிற்கு மாற்று என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட விஜயகாந்த், அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் 8 சதவீதம் வாக்குகள் வரை பெற்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். குறுகிய காலத்தில் இத்தனை சதவீதம் வாக்குகளை பெற்றது விஜயகாந்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்தது.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய தேமுதிக 10 சதவீத வாக்குகளை பெற்றது. இது தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் ஆளுமைகளாக இருந்த கலைஞர், ஜெயலலிதாவையும் கூட பதற்றம் அடைய செய்தது. இதன் தொடர்ச்சியாக 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டனர். அந்த தேர்தலில் அதிமுக ஆளும் கட்சியாகவும் தேமுதிக எதிர்க்கட்சியாக மாறியது.
அதன் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் எதிர்க்கட்சித் தலைவராக சென்ற விஜயகாந்த். பிறகு தன்னுடைய காரரான பேச்சாள் எதிர்ப்பை சந்திக்க தொடங்கினார். இதுவே அதிமுகவிற்கும் தேமுதிகவிற்கும் நேரடியான சண்டை ஏற்பட காரணமாக மாறியது. அதன் பிறகு தேமுதிகவை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் அதிமுகவில் ஐக்கியமாயினர். இது தேமுதிகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிகள், மதிமுக, விசிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் மக்கள் நல கூட்டணியை உருவாக்கினர். இதன் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு முழுவதும் மிகப் பரபரப்பாக பேசப்பட்ட மக்கள் நல கூட்டணி நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் அரசியல் நடவடிக்கைகள் குறைந்தன. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் தேமுதிகவை வழிநடத்த தொடங்கினர். ஆனால் இது தேமுதிகவிற்கு பயன் அளிக்கவில்லை. தேமுதிகவிலிருந்து பலரும் கட்சி மாற தொடங்கினர். அதன் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தேமுதிக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டின் உச்சபட்ச நட்சத்திரமாக உயர்ந்து, தமிழ்நாட்டினுடைய முக்கிய அரசியல் அடையாளமாக மாறிய விஜயகாந்த் தமிழக மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பார்.