அதிரடி நடிகர் முதல் அரசியல்வாதிவரை: நடிகர் விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர், தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் விஷால் திரை வாழ்க்கை முதல் நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி என்று அடுத்தடுத்து எடுத்த வைத்த அதிரடி நடவடிக்கைகளை பார்ப்போம்.
ஆகஸ்ட் 29, 1997 ஆம் ஆண்டு ஜேகே ரெட்டி, ஜானகி தேவி ஆகியோருக்கு விஷால் மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை உள்ளனர். இவருடைய இயற்பெயர் விஷால் கிருஷ்ணா ஆகும்.
நடிகர் விஷாலின் தந்தை ஜே கே ரெட்டி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உள்ளார். தந்தைக்குத் திரைத் துறையில் இருந்த பழக்கத்தைக் கொண்டு 1989 ஆம் ஆண்டு ஜாடிக்கேத்த மூடி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஷால் நடித்தார்.
பிறகு செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு கதாநாயகனாக அறிமுகமான விஷால், தன்னுடைய தொடர் ஓட்டத்தின் காரணமாக தமிழில் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பைப் பெற்றார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றியை கண்டு இருந்தாலும், பல திரைப்படங்கள் தோல்வியையும் கண்டு இருக்கின்றன. ஆனாலும் நடிகர் விஷால் தனி ரசிகர் வட்டாரத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டு தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக மாறினார்.
அதே நேரம் திருட்டு விசிடிகள் தமிழ்நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தி இருந்ததை பார்த்து வீதியில் இறங்கி திருட்டு விசிடி ஒழிக்க தொடர் முயற்சியை முன்னெடுத்தார். இது விஷாலினுடைய துணிச்சலான நடவடிக்கை என்று பாராட்டை குவித்தது. மேலும் இது திரைத்துறையினர் மத்தியில் விஷாலின் முக்கியத்துவத்தை மேலோங்க செய்தது. அதன் பிறகு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் மூத்த நடிகர்களை தனது சக இளம் நட்பு வட்டாரத்தில் உள்ள நடிகர்களை வைத்து ஜெயித்துக் காட்டினார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தமிழ்நாடு பேசு பொருளாக மாறியது. மேலும் 42 கோரிக்கைகளை முன்வைத்து நடிகர் விஷால் முன்வைத்த பிரச்சார உத்தி விஷாலுக்கு வெற்றியை பெற்று தூங்குவதாக பாராட்டப்பட்டார்.
அதே நேரம் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உதவுவது, தற்கொலை செய்து கொண்ட விவசாயின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கியது, தமிழ்நாட்டின் நடைபெற்ற முக்கிய பிரச்சனைகளில் குரல் கொடுத்தது என்று நடிகர் விஷால் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு ஆர்கே நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய விஷால் வேட்பு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து போட்டியிலிருந்து பின் வாங்கினார்.
அதே நேரம் அவ்வப்போது தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் குறித்தான தன்னுடைய கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.திரைத்துறையில் தொடங்கிய நடிகர் விஷாலின் பயணம், நடிகர் சங்கத்தில் வெற்றியை கண்டு, அரசியலில் பயணிக்க நேரம் தேடிக் கொண்டிருக்கிறது.