32 வருடங்களுக்குப் பின் 'தலைவர் 170' படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் இன்னொரு சூப்பர் ஸ்டார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் தெலுங்கு ஸ்டார் சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், நடிகர் மோகன்லால் உட்பட பலர் நடிக்க, இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'லால் சலாம்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து 'ஜெய் பீம்' படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்த அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகிவரும் நிலையில், தற்போது இப்படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அது வேறுயாருமல்ல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்தான்.

இருவரும் இணைந்து 1991ம் ஆண்டு வெளியான 'HUM' என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், 32 வருடங்களுக்குப் பின் மீண்டும் 'தலைவர் 170' படத்தில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லையென்றாலும், இரண்டு சூப்பர் ஸ்டாரும் இணைந்து தற்போது நடித்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் கற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.