'அக நக முக நகையே...' த்ரிஷா!
சினிமாத்துறையில், கடந்த 20 ஆண்டுகளாக, முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இன்று தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.
2001ம் ஆண்டு காலகட்டத்தில், கோலிவுட்டில் நடிகைகளாக வலம் வந்தவர்களில் பெரும்பாலும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் முன்னணி நடிகைகளாக வலம்வந்த சமயத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணாக களமிறங்கி இன்றுவரை முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் நடிகை த்ரிஷா.
1983ல் சென்னையில் பிறந்த நடிகை த்ரிஷா தனது பள்ளிப்படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் சென்னையிலேயே முடித்தநிலையில், அவருக்கு மாடலிங்கில் அதிக ஈடுபாடு இருக்கவே, முதன்முதலாக அதில் காலடி பதித்து, 1999ம் ஆண்டு 'மிஸ் மெட்ராஸ்' பட்டத்தையும் வென்றார்.

அதன்பின்னர் அவர் சினிமாவில் முதன்முதலாக அடியெடுத்து வைத்ததும் அதே 1999ம் ஆண்டுதான். பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான 'ஜோடி' படத்தில்தான் அறிமுகமானார். ஆனால், அப்படத்தில் யாரும் அறிந்திராத துணை கதாபாத்திரத்தில் மட்டுமே தோன்றினார்.
அதையடுத்து அவர் 2002ம் ஆண்டுதான் நடிகர் சூர்யா நடித்து வெளியான 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
அதைத் தொடர்ந்து அவரது மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக எகிற ஆரம்பித்தது. 'சாமி', 'எனக்கு 20 உனக்கு 18', 'கில்லி', 'ஆய்த எழுத்து' என தொடர்ந்து பிரபல முன்னணி நடிகர்களின் படத்திலும், பிரபல முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்து இன்றுவரை தமிழகமே கொண்டாடும் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அதிலும், 90's கிட்ஸ்களின் காதல் காவியமாக, 2019ல் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான '96' திரைப்படத்தில் த்ரிஷாவின் அந்த தோற்றமும், நடிப்பும் வெகுவாகவே ரசிகர்களைக் கவர்ந்தது.
'பரமபதம் விளையாட்டு', 'ராங்கி' உட்பட படங்கள், கதாநாயகன் இல்லாமல் அவரே முக்கிய ரோலில் நடித்திருந்தாலும் அந்த படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் அழகின் உருவமான 'குந்தவை' இப்படித்தான் இருப்பாரோ என்று கூறுமளவுக்கு அத்தனை அழகாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அந்தளவுக்கு, இவருடைய அழகும் கூடிக்கொண்டே போகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.