ஹாலிவுட் நடிகர் ராக்-கை பின்னுக்குத் தள்ளிய அக்ஷய்குமார்!
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், 3 நிமிடங்களில் ரசிகர்களுடன் 184 செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து நடிகர் ராக் -கை பின்னுக்குத் தள்ளியதோடு, செல்ஃபி புகைப்படம் எடுப்பதில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஸ்மித் என்பவரின் சாதனையையும் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
நடிகர் அக்ஷய் குமார் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர். உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ளதோடு, அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாகவும் வலம் வருகிறார்.
இவர் தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட்டிலும் பிரபலமானவர்.
இந்நிலையில், தற்போது இவரது நடிப்பில் தயாராகியுள்ள 'செல்ஃபி' இந்தி திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம், மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்து ஹிட்டான 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் இந்தி ரீமேக் ஆகவும் உருவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, செல்ஃபி படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிலையில், வித்யாசமான முறையில் விளம்பரப்படுத்த நினைத்த அக்ஷய்குமார் அதன்மூலம் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

அதாவது, 3 நிமிடங்களில் 184 செல்ஃபி புகைப்படங்களை எடுத்து அக்சய் குமார் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளர். அதன்படி, கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
அக்ஷய் குமாருக்கு முன், இந்த சாதனையை 2015 ஆம் ஆண்டு ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் (ராக்) செய்தார். அவர் மூன்று நிமிடங்களில் 105 செல்பிகளைக் கிளிக் செய்திருந்தார். அவரை பின்னுக்குத் தள்ளியதோடு, அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஸ்மித் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு 3 நிமிடங்களில் 168 செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், அதனையும் முறியடித்து அக்ஷய் குமார் முதலிடத்தில் வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.