விக்ரமிற்கு அனில்கபூர் பாராட்டு!

விக்ரமிற்கு அனில்கபூர் பாராட்டு!

பாலிவுட் பூமராங்!

பாலிவுட் நடிகர் அனில் கபூர், ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரமைப் பாராட்டியுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் – 2’ படம், ஆதித்த கரிகாலன் - நந்தினி காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. கதைப்படி அவர் படத்தில் மரணமடையும் காட்சிகளில் பல ரசிகர்கள்  அழுதனர்.

இப்படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்பட, அதைப் பார்த்த அனில் கபூர் தனது டிவிட்டரில் எழுதியிருப்பதாவது:

“மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் – 2’ படத்தைப் பார்த்தது சிலிர்க்க வைக்கும் அனுபவமாகும். விறுவிறுப்பான கதை; வியக்க வைக்கும் பிரம்மாண்டம்; மயக்கும் இசை போன்றவைகள் ஆரம்பம் முதலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன. சீயான் விக்ரமின் சிறந்த நடிப்பிற்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

கடினமான பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் அற்புதமாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், எனது நண்பர் ரவிவர்மனின் ஒளிப்பதிவும் சூப்பர். உண்மையான ரத்தினத்தை இந்திய சினிமாவிற்குப் பரிசளித்த மணிரத்தினத்திற்கும், மொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்” எனப் பதவிட்டுள்ளார். பாராட்டுவதற்கும் நல்ல மனம் வேண்டும்!

மாதவனின் புகழாரம்!

மும்பையிலுள்ள தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் பிரபல நடிகர் மாதவன், பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய ஹீராயின் என்று சொல்லப்படும்
கங்கனா ரனவத்துடனும் இணைந்து இந்திப் படங்களில் நடித்துள்ளார். தன்னை ஆச்சரியப்படுத்திய சில ஹீரோயின்களைப் பற்றி அவர் கூறியதாவது:

“என்னுடன் சேர்ந்து நடித்த ஹீரோயின்கள் அனைவரும் மிகவும் தைரியசாலிகளாகவும், ஏற்றுக்கொண்ட கேரக்டர்களில் துணிச்சலாகவும் நடித்தவர்கள். தங்களுக்கென ஒரு பிரத்தியேக இடத்தை ஏற்படுத்திக்கொண்டவர்கள் ஆவார்கள்.

குறிப்பாக, மிகவும் புத்திசாலியான நடிகை கங்கனா ரனவத்தைப் பாராட்ட வேண்டும். ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிக்காமல், எல்லாவிதக் கேரக்டர்களிலும் எப்போதும் நிலைத்து நிற்கும் கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி நடித்துள்ளார். பாராட்டும் பெற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் நடிப்பைக் கண்டு நான் ஆச்சரியப்படுவது உண்மை.”

பெண்களின் உடலுக்கு மதிப்பு!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்த “கிஸி கா பாய்! கிஸி கி ஜான்” படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடித்த பலக் திவாரி “சல்மான்கான் படப்பிடிப்பு தளத்தில் பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்படும். உடல் முழுவதும் மறைக்கப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு சல்மான்கான் அளித்த பேட்டியில், “ஒரு கண்ணியமான படம் எடுக்கப்பட்டால், எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கச் செல்கின்றனர். பெண்களின் உடல் மிகவும் மதிப்பு மிக்கதென நான் நினைக்கிறேன். எந்த அளவுக்கு அதனை மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது. பிரச்னை ஆண்களிடம்தான் உள்ளதே தவிர, பெண்களிடமில்லை. பல ஆண்கள், மற்றவர்கள் குடும்பத்துப் பெண்களைப் பார்க்கும் விதம் எனக்குப் பிடிக்காது. நான் படம் எடுத்தால், இயக்கினால், பெண்களை ஆண்கள் வெறித்து நோக்கும் காட்சிகளை வைக்க மாட்டேன்!” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com