நிதி நெருக்கடி காரணமாக பிரபல கலை இயக்குனர் நிதின் தேசாய் தற்கொலை!

நிதின் தேசாய்
நிதின் தேசாய்

கான், ஜோதா அக்பர் உள்பட ஏராளமான வெற்றிப்படங்களில் பணியாற்றிய கலை இயக்குநர் நிதின் தேசாய் தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில் அவர், நிதி நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் சலாம் பாம்பே, தேவ்தாஸ், முன்னாபாய் எம்.பி.பி.எஸ், பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றியவர் நிதின் சந்திரகாந்த் தேசாய். மேலும் தயாரிப்பு மேற்பார்வையாளராக லகான், ஜோதா அக்பர் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் பணியாற்றியுள்ளார்.|

ஜோதா அக்பர் படத்தின் காட்சி
ஜோதா அக்பர் படத்தின் காட்சி

ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் க்ரோர்பதி நிகழ்ச்சி தொடர்பான காட்சிகளுக்கு செட் அமைத்தது கொடுத்து இவர்தான். ஷாருக்கான் நடித்த தேவ்தாஸ், மம்முட்டி நடித்த டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர்  உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்களுக்கும் கலை இயக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் க்ரோர்பதி செட்
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் க்ரோர்பதி செட்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கோலோச்சி வரும் நிதின் பாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களான சஞ்சய் லீலா பன்சாலி, அசுதோஷ் கௌரிக்கர், ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா உள்ளிட்ட பலருடன் பணிபுரிந்துள்ளார். அதோடு 'ஹெலோ ஜெய் ஹிந்த்', 'அஜிந்தா' உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ள நிலையில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

தேவ்தாஸ், லகான், ஹம் தில் தே சுக்கே சனம், அம்பேத்கர் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த கலை இயக்குநருக்கான 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இவர் பணியாற்றிய சலாம் பாம்பே, லகான் உள்ளிட்ட படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மும்பையை அடுத்த கர்ஜாத் பகுதியில் சொந்தமாக என்.டி. ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தனியாக ஸ்டுடியோவை நிறுவி நடத்தி வந்த நிதின் தேசாய் புதன் கிழமை தனது ஸ்டுடியோவிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அலுவலகத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த நிதின் தேசாயின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிதி தேசாய் 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ECL ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து 185 கோடி ரூபாய் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அது 252 கோடியாக அதிகரித்த நிலையில், திருப்பி செலுத்த இயலாமல் தவித்துள்ளார். மேலும் தம்மால் கடனை திருப்பி செலுத்த இயலாமல் திவால் நோட்டீஸ் அளித்துள்ளார். அதை நீதிமன்றம் கடந்த வாரம் ஏற்றுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  வரும் ஆகஸ்ட் 9-ந் தேதி அவர் தனது 58-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், திடீரென இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நிதின் தேசாயின் மறைவு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com