காதலிகளை மறக்காத பாரதிராஜா!

காதலிகளை மறக்காத பாரதிராஜா!

பதின்ம வயதில் வரும் காதலை நம்மால் மறக்க முடியாது. இந்த பதின்ம வயது காதலையும் அதன் பிறகு வந்த காதலையும் மேடையில் சொல்லி அசத்தி உள்ளார் பாரதி ராஜா.டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே 18 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முக்கிய டைரக்டர்களான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கிறார்கள்.

உலக அளவில் பாராட்டுகளை குவித்த மாடர்ன் லவ் எனும் அசல் இணையத் தொடரின் தமிழாக்க திரைப்படத்தில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், அசோக் செல்வன், டி ஜே பானு, ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி, வசுந்தரா, ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன், கிஷோர் ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, வாமிகா மற்றும் பிபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

''நான் பாரம்பரிய பிடிப்புள்ள மனிதன். திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். வழக்கமான படைப்புகளில் இருந்து திசை மாறி புதுமையாக சொல்ல வேண்டும் என விரும்புவதுண்டு. இதனை எனது புதிய நண்பரான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சாத்தியப்படுத்தி இருக்கிறார். அவருடைய படைப்புகளில் வீரியமும், புதுமையும் இருக்கும். என்னை காதல் கதைகளை.. காதல் உணர்வுகளை.. காட்சிப்படுத்துவதில் மன்னன் என்று சொல்வதுண்டு. காதல் இல்லையேல் வாழ்க்கை இல்லை. காதலிக்கவில்லை என்றால் கலைஞனாக முடியாது. காதல் என்பது இதுதான் என எந்த வரையறையும் இல்லை. காதல் என்பது மென்மையானது

எனக்கு வயதாவதில்லை. வயதைக் குறித்து நான் எப்போதும் கவலைபட்டதில்லை. இன்றும் நான் இளைஞனாகவும், இளமையாகவும் உணர்கிறேன். இந்த 84 வயதிலும் காதலிக்கிறேன் என்பதனை தைரியமாக சொல்கிறேன்.

எனக்கு ஒன்பதாவது படிக்கும்போது ஒரு காதல் ஏற்பட்டது. அதன் பிறகு சென்னைக்கு வந்தவுடன் இங்கும் மற்றொரு காதல் உண்டானது. அதன் பிறகு காலங்கள் மாற மாற நான்கு காதல்கள் ஏற்பட்டது.

நான்கு காதல்கள் இருக்கிறது என்கிறீர்களே..! இதில் எங்கே காதல்? என்று கேட்டால், இந்த குடை தான் நிழல் தரும் என கருதக்கூடாது. நமக்கு எந்தக் குடையும் நிழல் தரும் என நினைக்க வேண்டும். நிழல் தரும் அந்த நான்கு குடைகளையும் என்னால் மறக்க இயலாது. ஏனெனில் காதல் இல்லாமல் இருக்க இயலாது. காதல் தவிர்க்க முடியாதது. அவசியமானது.

‘பறவை கூட்டில் வாழும் மான்’ எனும் அத்தியாயத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக அமேசான் பிரைம், தியாகராஜன் குமாரராஜா, அதில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசைஞானி இளையராஜா இந்த பாணிகளான படைப்புகளுக்கு எம் மாதிரியான இசையை வழங்குவார் என்று ஆவலோடு காத்திருந்தேன் ஆனால் அவர் தன்னுடைய மாயாஜால வித்தை காட்டி என்னை அசத்தி விட்டார்.'' என்றார்."பாரதி ராஜா 84 வயதிலும் தைரியமாக தனது நான்கு காதலையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சமகால இளைஞர்களை உற்சாகப்படுத்தும் பாரதி ராஜா என்ற வாலிபர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து பல படைப்புகள் தர வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com