கோலிவுட்டின் தலைநகரம்! நம்ம சென்னை மாநகரம்!

Madras Day 2023
KOLLYWOOD
KOLLYWOODwww.gulte.com
Madras Day 2023
Madras Day 2023

மெரிக்காவின் சினிமாவை  ஹாலிவுட் என்று அழைப்பதுபோல் தமிழ்நாட்டு சினிமாவை கோலிவுட் என்று அழைத்து பெருமிதம் கொள்கிறோம். உண்மையில் ஹாலிவுட் திரைப்பட களங்களைவிட  சுவாரஸ்யங்கள் கொண்டது நம்ம கோலிவுட்

       கோடா பாக் அதாவது குதிரைகளின் நிறுத்தம் என்றிருந்த பகுதி பின்னாட்களில் கோடம்பாக்கம் என்றானது. தமிழ் சினிமாவின் புண்ணியத்தில் இன்று அதுதான் கோலிவுட்.

       நினைத்து பார்த்தால் ஆச்சர்யமாகவே இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த காலத்திலேயே சினிமா கண்டுபிடிக்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் அது சென்னை வந்தடைந்துவிட்டது.

விக்டோரியா பப்ளிக் ஹால்
விக்டோரியா பப்ளிக் ஹால்

       1897 ஆம் ஆண்டு எட்வர்ட் என்ற ஆங்கிலேயர்  விக்டோரியா பப்ளிக் ஹாலில் முதல் நகரும் படத்தை காண்பித்தார். இதே காலக்கட்டத்தில் டூபண்ட்  என்ற பிரஞ்சுக்காரர் ‘இயேசுவின் வாழ்க்கை’ என்ற படத்தை திருச்சியில் திரையிட்டு கொண்டிருந்தார். ஆக சினிமாவானது, இருவழிகளில் தமிழ்நாட்டை  ஒரே காலக்கட்டத்தில் வந்தடைந்தது.

எலக்டிரிக் தியேட்டர் கட்டிடம்
எலக்டிரிக் தியேட்டர் கட்டிடம்

       டூபாண்டிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட, தன்னிடம் இருந்த திரைப்பட கருவிகளை யாரிடமாவது கொடுத்துவிடலாம் என்றபோது திருச்சி ரயில்வேயில் பணியாற்றிகொண்டிருந்த சுவாமிக்கண்னு வின்செண்ட் என்பவர் அதனை வாங்கி ஊர் ஊராக சென்று திரையிட தொடங்கினார் . இப்படி டூரிங் டாக்கிஸாக வளரத்தொடங்கிய சினிமா ரசனையானது, திருச்சி, சேலம், கோவை என்று உருவாக்கத்திலும் தடம் பதித்து பின்னர் சென்னையால் ஈர்த்துகொள்ளப்பட்டது.

       சினிமாவிற்கு மக்களிடம் கிடைத்த பெரும் வரவேற்பை கண்ட வார்விக் மேஜர் என்ற ஆங்கிலேயர் 1900 ஆம் ஆண்டு ‘எலக்டிரிக் தியேட்டர்’ எனும் தியேட்டரை சென்னை மவுண்ட் ரோட்டில் உருவாக்கினார். இந்த தியேட்டர் கட்டிடம் இப்பொழுதும் அண்ணாசாலை தபால் நிலைய வளாகத்தில் தபால்வில்லைகள் சார்ந்த கட்டிடமாக இருகிறது.

கெயிட்டி தியேட்டர்
கெயிட்டி தியேட்டர்

ஆங்கிலேயர்களின்  இந்த சினிமா வர்த்தகம் இந்தியர்களையும் ஈர்க்க தொடங்கியது. பெரும் செல்வந்தர்கள் இம்முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கினர். சென்னையில் வசித்த வெங்கய்யா என்பவர் ‘கெயிட்டி’ எனும் திரையரங்கை 1914 ஆம் ஆண்டு எலக்டிரிக் தியேட்டர் அருகிலேயே உருவாக்கினார். இதுதான் தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் சுதேசி திரையரங்கம் ஆகும்.

    ப்படி நிரந்தர திரையரங்கங்கள் உருவாக தொடங்கியவுடன் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் படங்கள் வரவழைக்கப்பட்டு திரையிடப்பட்டன. அவ்வகையில் ‘ராஜா ஹரிசந்திரா’ எனும் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை சென்னையில் மோட்டார் வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் வேலூரை சேர்ந்த ஒருவர் பார்த்தார். அவர் பெயர் நடராஜ முதலியார். தானும் திரைப்படம் தயாரிக்கவேண்டும் என்ற ஆர்வம் மேலிட அவர் "கீசகவதம்" என்ற முதல் தமிழ் திரைப்படத்தை உருவாக்கினார்.

ராஜா ஹரிசந்திரா
ராஜா ஹரிசந்திரா

       நடராஜ முதலியாரின் வெற்றியை தொடர்ந்து சென்னை திரைப்படத்துறையின் களமாக உருவெடுக்க தொடங்கியது . 1927 ஆம் ஆண்டு சிவகங்கையை சேர்ந்த  ஏ.நாராயணன் என்பவர் ஜெனரல் பிக்சர் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தை தொடங்கி 20க்கும் அதிகமான படங்களை தயாரித்தார். அன்றைய காலக்கட்டத்தில் 5000 ரூபாய் இருந்தால் ஒரு படத்தை தயாரிக்கலாம் என்றிருந்த நிலையில் ‘லைலா’ என்றொரு படத்திற்காக சுமார் ரூபாய் 75000 வரை அந்த காலத்திலேயே செலவு செய்த மெகா புரடியுசர் அவர். இதுமட்டுமல்ல  சிலப்பதிகாரத்தை அடிப்படையாக கொண்டு இவர் உருவாக்கிய படத்தில் சென்னை துறைமுகம் ஒரு கதை களமாக நடித்தது. இவ்வாறு,  வெளிப்புறபடப்பிடிப்புகளுக்கும் முன்னோட்டம் நிகழ்ந்துள்ளது.

       திரைப்படம் ஒரு வர்த்தகமாக உருவெடுக்க தொடங்கியவுடன் இதனை நெறிப்படுத்த பல அமைப்புகள் உருவாகின.  1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான ‘தி மெட்ராஸ் பில்ம் லீக்’ நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு ‘தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை’ சென்னையில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் முதல் தலைவராக சுதந்ததிர போராட்ட வீரர் காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான தீரர் சத்தியமூர்த்தி சேவையாற்றியுள்ளார்.

       தொடர்ந்து பல திரையரங்குகள் சென்னையில் உருவாகின. 1931 ஆம் ஆண்டு செண்டரல் தியேட்டர் உருவானது . இது இப்பொழுது முருகா தியேட்டர் என்று அழைக்கப்படுகிறது.  1934 ல் ஶ்ரீனிவாசா சினிடோன் என்ற திரையரங்கம் உருவானது.

       ஆங்கிலேயர்களின் தயவால் சென்னைக்கு அன்று ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததினால் பெரும்பாலான வர்த்தக இயக்கங்கள் சென்னையில் நிகழ்ந்தன. அதனால் சினிமாவும் படிபடியாக சென்னையை நோக்கி நகர்ந்தது.

1948 வரை காரைக்குடியில் தியேட்டர் நடத்தி வந்த  ஏவி எம் மெய்யப்ப செட்டியார் இந்திய விடுதலைக்கு பிறகு சென்னைக்கு மாறி 1948-ல் வடபழனியில் பிரமாண்டமான திரைப்பட ஸ்டூடியோக்களை உருவாக்கினார்.  தெலுங்கு திரைப்படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டிய பி.என்.ரெட்டி விஜயா வாகினி ஸ்டூடியோவை உருவாக்கினார். ஒரு கட்டத்தில் அசுர வேகத்தில் முப்பதுக்கும் அதிகமான ஸ்டூடியோக்களை சென்னையில் உருவாக்கினார்.

சென்னையின் திரையரங்குகள்
சென்னையின் திரையரங்குகள்

       மவுண்ட் சாலையில் ஜெமினி ஸ்டுயோ முதல் ஏவிஎம், விஜயா, பிரசாத் என விருகம்பாக்கம் வரை படப்பிடிப்பு தளங்கள் பெருகின. அதே நேரம் சென்னையை சுற்றிலும் பல திரையரங்குகள் உருவாகின. காமதேனு, கிருஷ்ணவேணி, மினர்வா, அலங்கார், பிரபாத், மகாலட்சுமி, வெலிங்டன், ராக்ஸி, சயானி, மேகலா, கேசினோ, ஆனந்த் என்று தடுக்கி விழுந்தால் தியேட்டர் என்ற நிலையில் சினிமாவானது சென்னை வாசிகளின் பொழுதுபோக்கு தளமானது.

       ‘வெகோமிஸ் தியேட்டர்’ எனப்படும் எப்பொழுதும் திரைப்படங்கள் ஓடும் (Continuous shows) சபையர் தியேட்டர் மவுண்ட் ரோட்டில் உருவானது. ஒரே கட்டணத்தில் நீங்கள் தொடர்ந்து ஒரே படத்தை திரும்ப திரும்ப பார்க்கும் ஆனந்தத்தை மக்கள் பெற்றனர்.

       இப்படி உருவான திரையரங்குகள் காலப்போக்கில் தாக்குபிடிக்க முடியாமல், பல ஷாப்பிங் காம்பிளக்ஸுகளாகவும்,  திருமண மண்டபங்களாகவும் உருமாறின. சத்யம், தேவி, கிருஷ்ணவேணி, செண்டரல், நேஷனல் போன்ற திரையரங்கள் காலப்போக்கிற்கு ஏற்ப தங்களை நவீனமாக்கிக்கொண்டு இன்று திரைப்பட மால்களாக நடை பயில்கின்றன. 

சந்திரலேகா
சந்திரலேகா

         ந்தி திரைப்பட உலகம்தான் இந்தியாவின் பெரிய வர்த்தகம் என்பதை தமிழ் திரைப்படங்கள் பலமுறை உடைத்து காண்பித்து இருக்கின்றன. எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் உருவான ‘சந்திரலேகா’ அன்றைய காலக்கட்டத்தில் இந்திய திரைப்பட உலகில் எவருமே முயற்சி செய்யாத மிகப்பெரிய பிரமாண்டம்.

       அதே போன்று ‘டிரைவ் இன்’ எனப்படும் காரில் இருந்தே படங்களை பார்க்கும் சொகுசு திறந்தவெளி அரங்க முயற்சிகளும் சென்னையில் நடைபெற்றன.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

        பிரபல வங்கப்பட இயக்குனர் தனது நீண்ட நாள் திரைப்பட சேவைக்காக முதன் முதலில் ஆஸ்கர் வாங்கியிருந்தாலும், இளம் வயதில்  ஆஸ்கரை வென்ற தமிழர் ஒருவர் சென்னைக்காரர் என்பது சென்னைக்கு பெருமை. பொதுவாக  இந்தியா என்றால் இந்தி என்று நினைத்துகொண்டிருந்த உலகிற்கு ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று அவர் ஆஸ்கர் அரங்கில் தமிழில் முழக்கமிட, என்ன மொழி, என்ன ஊர்? என்று பல கோடி மக்களால் தேடப்பட்டு அது தமிழ்நாடு, சென்னை என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டது நம்ம சென்னை.

       பாலிவுட் பாஷாக்கள் பலர் முயற்சித்து அடைய முடியாத சூப்பர் ஸ்டார் எனும் உயரத்தை தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து தக்கவைத்து கொண்டிருக்கிறது சென்னை. அந்த காலத்திலேயே ஒரு லட்சம் சம்பளம் பெற்ற வசூல் சக்கர்வத்திகள் நிறைந்தது சென்னை சினிமா. அது இந்த காலத்திலும் ரஜினி, கமல் என்று தொடர்கிறது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

       கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’  புதினத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பிஎஸ்-1 மற்றும் பிஎஸ் - 2, கேஜிஎப், ஆர் ஆர் ஆர் ஆகிய கன்னட, தெலுங்கு படங்கள் தட்டிசெல்ல முயன்ற ‘திரைப்பட வர்த்தக நகரம்’ என்ற பெருமையை மீண்டும் மீட்டு சென்னைக்கு கொடுத்தது.

      ரஜினியின் சமீபத்திய  ‘ஜெயிலர்’ முதல் ஆறு நாட்களில் 400 கோடி வசூல் என்ற புள்ளிவிவரம்  இதனை உறுதி செய்துள்ளது. இந்திய திரைப்பட வர்த்தக தலைநகரம் சென்னை என்பதை  உரக்கச் சொல்கிறது.

ஜெயிலர் ரஜினி
ஜெயிலர் ரஜினி

       பல ஸ்டூடியோக்கள் காணமல் போய் இருக்கலாம். பல தியேட்டர்கள் உருமாறியிருக்கலாம். எனினும் சென்னையும் தமிழ் சினிமாவும் தான் இந்திய சினிமா கர்த்தாக்களின் ஈர்ப்பு தளம்.

      சமீபத்தில் அமிதாப்பிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. “உங்களுக்கு எந்த மொழியில் அடுத்து நடிக்க ஆசை?”  அதற்கு அமிதாப் சொன்னார், “நான் பல ஆண்டுகளாக என் ஒரே விருப்பம் என்று சொல்வது தமிழில் நடிக்க ஆசை என்பதுதான்!

அமிதாபச்சன்
அமிதாபச்சன்

சினிமாவை கண்டுபிடித்த லூமியர் சகோதரர்களின் தேசமான பிரான்ஸ்  சினிமாவை கொண்டாடுகிறதோ இல்லையோ நம்ம சென்னை பல பரிமாணங்களிலும் சினிமாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. சென்னை எத்தனை பரிமாணங்கள் எடுத்தாலும் அத்தனைக்கும் ஈடுகொடுத்து தமிழ் சினிமாவும் முன்னேறிகொண்டே இருக்கும். இதையே வரலாற்று நிகழ்வுகள் நமக்கு சொல்கின்றன.

Cheers Chennai! Kudos to Kollywood!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com