'சந்திரமுகி 2' : ஸ்க்ரீன்ல பெருசா எதோ இருக்கும்போல! வடிவேலுவுடன் fun செய்யும் புகைப்படத்தை பகிர்ந்த ராகவா லாரன்ஸ்!
2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் `சந்திரமுகி'. இந்நிலையில் தற்போது 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலுவுடன் இருக்கும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்திருநத 'சந்திரமுகி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் கொடுத்தது. இதில் ரஜினியின் அட்டகாச வேட்டையன் நடிப்பு, ஜோதிகாவின் பேய்ததன நடிப்பு, வடிவேலுவின் தரமான காமெடி என அனைத்து தரப்பிலும் அப்ளாஸ் வாங்கியது. அதுவும் வடிவேலுவின் 'மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு'ங்கற டயலாக் மிகவும் பிரபலமானது.
இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின், லைகா தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி 2' திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்க, தோட்டா தரணி கலை இயக்குநராகவும், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, ஜோதிகா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்க, மற்றும் பல முன்னணி நடிகர்களும் நடிக்க, இவர்களுடன் நடிகர் வடிவேலு 'சந்திரமுகி'யில் அவர் நடித்த அதே முருகேசன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் 'சந்திரமுகி-2' படப்பிடிப்பின் போது வடிவேலுவுடன் ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'முழுசா சந்திரமுகியா மாறுன வடிவேலு, இழுத்து அணைக்கும் ராகவா லாரன்ஸ்' என்று பதிவிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தைப் பார்க்கும்போது, திரையில் இந்த இருவரின் கூட்டணியில் தரமான சம்பவத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றுதான் தோன்றுகிறது. தற்போது இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.