அடடா! ஆக்ஷன் காட்சிக்கான படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சனுக்கு காயம்!
ஹைதராபாத்தில் படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அமிதாப் பச்சனின் வலது விலா எலும்புப் பகுதியில் தசைக் கிழிவு ஏற்பட்டது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார். அடுத்து வரவிருக்கும் ‘புராஜெக்ட் கே’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு அதிரடி ஷாட்டின் போது தனக்கு காயம் ஏற்பட்டதாக அவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமை தனது விலா எலும்புகள் உடைந்துவிட்டதாகவும், தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் பிக் பி தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
படத்தின் ஆக்ஷன் காட்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அவரது வலது விலா எலும்புக் கூண்டில் தசைக் கிழிப்பு ஏற்பட்டது.
அமிதாப்புக்கு ஸ்ட்ராப்பிங் செய்யப்பட்டுள்ளது, அவர் ஓய்வெடுக்க வேண்டும். குணமாகும் வரை தற்காலிகமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் வகைத் திரைப்படமான புராஜெக்ட் கே யில் பிரபாஸ் நாயகனாகவும், தீபிகா படுகோன் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தில் இவர்களைத் தவிர அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்கம் நாக் அஷ்வின். தயாரிப்பு வைஜயந்தி மூவி மேக்கர்ஸ். இத்திரைப்படம் 2024 ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.